பேநவ் (PayNow) சேவையைப் பயன்படுத்துவோர் ஜூன் 6ஆம் தேதி முதல் புனைபெயர்களைப் பயன்படுத்த முடியாது.
வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரபூர்வப் பெயரே பணப் பரிமாற்றங்களின்போது பயன்படுத்தப்படும்.
எனினும், தனிநபர் உரிமைப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பெயரிலுள்ள சில எழுத்துகள் மறைக்கப்பட்டிருக்கும்.
“ஆள்மாறாட்ட மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், சில்லறை வாடிக்கையாளர்களுக்கான பேநவ் புனைபெயர் வசதி நிறுத்தப்படும்,” என்று சிங்கப்பூர் வங்கிகளின் சங்கம் புதன்கிழமை (ஏப்ரல் 29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆள்மாறாட்ட மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், பணப் பரிமாற்றங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தனிநபர் உரிமை சார்ந்த அம்சங்களும் கருத்தில்கொள்ளப்படும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
மோசடிக்காரர்கள் நம்பகமான நிறுவனங்களின் பெயர்களையோ அல்லது தனிநபர்களின் பெயர்களையோ பேநவ் புனைபெயர்களாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் சாத்தியமுள்ளது.
புதிய மாற்றத்தின் மூலம், பணத்தை அனுப்புவதற்கு முன்னதாகவே பெறுநரின் உண்மையான பெயரை வாடிக்கையாளர்கள் சரிபார்க்க முடியும். இதன்மூலம் தவறானவர்களுக்குப் பணம் செல்வதைத் தவிர்க்கலாம் என்று சங்கம் கூறியது.

