தாயகம் கடந்து வந்திருக்கும் வெளிநாட்டுச் சகோதரர்களுக்கு ஆண்டுதோறும் திறன்களைப் பரிசாக அளிப்பதால் ஒவ்வொரு நாளுமே கிறிஸ்துமஸ் திருநாளாகத் திகழ்கிறது என்கிறார் திரு அரவிந்த் டேனியல், 48.
இந்தியா, பங்ளாதேஷ், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த திரளான ஊழியர்களைத் திறனாளர்களாக மாற்றுவதே இவரின் நோக்கம்.
மைக்ரான் நிறுவனத்தின் உலகளாவிய தரச் செயல்பாட்டு மேலாளராக இருக்கிறார். ஆண்டுக்கொரு முறை அன்பளிப்புப் பைகளைத் தருவதுடன் நின்றுவிடக் கூடாது என்று அவர் நினைக்கிறார். நாம் பிறருக்கு அளிக்கும் பரிசு அவர்கள் வாழ்க்கையில் ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழாக்காலம் தமக்கு உணர்த்தும் முக்கியப் பாடம் என்று நம்புவதாகக் கூறினார் திரு டேனியல்.
அந்த நம்பிக்கைக்கு வடிவம்கொடுக்கத் தாம் எடுத்துவரும் முயற்சிகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார் அவர்.
‘‘வேலை தேடிவரும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருந்ததுண்டு.
‘‘மென்பொருள், தொழில்நுட்பம் சார்ந்த படிப்பு என்னுடையது. எனவே 2009ஆம் ஆண்டுவாக்கில், சாலைகளில் நின்றபடி, கண்ணில் தென்படும் வெளிநாட்டுச் சகோதரர்களுக்குக் கணினி பற்றிச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்,’’ என்ற திரு டேனியேல், தொடர்ந்து பேசினார்.
சகோதரர்கள் பலர் அதில் ஆர்வம்காட்ட, அவ்வப்போது செய்துவந்த இந்த நடவடிக்கையை எப்போதும் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டதாக அவர் சொன்னார்.
‘‘அப்படித்தான் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச மின்னிலக்கப் பயிற்சி நல்கிடும் திட்டம் தொடங்கியது. பல்லாண்டாகத் தங்கும் விடுதிகளுக்குச் சென்று அவர்களின் பணித்திறன்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் வாரந்தோறும் இலவச மின்னிலக்கப் பயிற்சி அளித்து வந்தோம்.
‘‘எனினும் கடந்த மூன்று ஆண்டாக இதனை ‘எஸ்ஜி ஸ்கில்ஸ் ட்ரெய்னிங்க்‘ (எஸ்எஸ்டி) எனும் அமைப்பின்கீழ் ஒருங்கிணைத்துக் கட்டமைக்கப்பட்ட பயிற்சியாகக் கொடுத்துவருகிறோம்,’’ என்று விவரித்தார் திரு டேனியல்.
சமூக நலனில் கவனம் செலுத்துகிறது இந்தத் தொண்டூழிய அமைப்பு. அதன் நிறுவனரான திரு டேனியல், பயிற்சிக்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றம், நம்பிக்கை, வருமான உயர்வு ஆகியவற்றைக் கண்கூடாகக் காணமுடிவதாகச் சொன்னார். கல்வியைக் கொடுத்து அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவது கூடுதல் உவகை என்றார் அவர்.
இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 34 பேர் மின்னிலக்கத் திறன் சார்ந்த பயிற்சியை முடித்துப் பட்டம் பெறுகின்றனர்.
‘‘அன்பின் பரிசை ஒருவருக்கொருவர் பரிமாறுவதுதான் உண்மையான கிறிஸ்துமஸ். உண்ணும்போது மட்டுமே ருசிக்கும் இனிப்புகள் போலல்லாமல் என்றைக்குமே வாழ்வை இனிக்கச் செய்திடும் பரிசை அவர்களுக்குத் தரமுடிவதால், இந்தக் கிறிஸ்துமஸை வெளிநாட்டுச் சகோதரர்களுடன் கொண்டாடுவது உணர்வுபூர்வமானது, ’’ என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் மொழி, இனம், நாடு கடந்து கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாட ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 20) மாலை செம்பவாங் கடற்கரையில் ஒன்றுகூடினர்.
அவர்களில் ஒருவர் கட்டுமானத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் திரு அய்யாவு குமார், 39.
‘‘குடும்பத்துடன் வசித்த நாங்கள் இப்போது இங்குத் தனியாக இருக்கிறோம். பிற சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் வாழ்வை ஆற்றல்மிக்கதாக மாற்றும் திறனைப் பரிசாகப் பெறுகையில் சிறப்பாக இருக்கிறது,’’ என்றார் அவர்.
அயலகச் சொந்தங்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட வந்திருந்தார் மற்றொருவரான திரு ஜெயபாலன் கார்த்தி, 26. சிங்கப்பூரில் அவர் முதன்முறையாகக் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறார்.
‘‘நான் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறேன். எனினும் கிறிஸ்துமஸ் விழா எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிய மிகவும் ஆவலாக இருந்ததால் வந்துள்ளேன். எங்கள் பின்னணி வேறு என்றாலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட மகிழ்ச்சி எங்களை ஒன்றாகப் பிணைக்கிறது,’’ என்று திரு ஜெயபாலன் கார்த்தி கூறினார்.

