சிங்கப்பூர் நாணயத்தின் நிலைத்தன்மையை வேறு எந்தவொரு நாணயமும் அளவுக்கு அதிகமாகப் பாதிப்பதில்லை: ஆல்வின் டான்

சிங்கப்பூர் நாணயத்தின் நிலைத்தன்மையை வேறு எந்தவொரு நாணயமும் அளவுக்கு அதிகமாகப் பாதிப்பதில்லை: ஆல்வின் டான்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 May 2026 - 6:34 pm

2 mins read

சிங்கப்பூர் நாணயத்தின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை எந்தவொரு குறிப்பிட்ட நாணயமும் அளவுக்கு அதிகமாகப் பாதிப்பதில்லை என்று வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் வியாழக்கிழமை (மே 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர்கள் சபை உறுப்பினருமான திரு டான், அமெரிக்க டாலரின் மாறிவரும் பங்கு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறு கூறினார்.

அமெரிக்க டாலரின் பயன்பாட்டிலிருந்து உலக நாடுகள் விலகிச் செல்லும் போக்கு நாணயப் பரிமாற்றத்தில் சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பை எவ்வாறு பாதிக்கும் என்று இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இப் ஹோன் வெங் கேள்வியெழுப்பினார்.

சிங்கப்பூரின் மாறிவரும் வர்த்தகப் போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில், மற்ற நாணயங்களின் மதிப்பீடுகள் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுவதாக திரு டான் கூறினார்.

அனைத்துலக வர்த்தகத்திலும் பெரும்பாலான பொருள்களுக்கான பரிவர்த்தனைகளிலும் பயன்படுத்தப்படும் அமெரிக்க டாலர், உலகளவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுவே உலகின் முக்கியக் கையிருப்பு நாணயமாகவும் வர்த்தகப் பற்றுச்சீட்டு நாணயமாகவும் திகழ்கிறது.

உலகளாவிய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டைக் கொண்டுள்ள அமெரிக்க டாலர் போன்ற சில நாணயங்களில் மட்டுமே பெரும்பாலான உலகளாவிய வர்த்தகங்கள் பட்டியலிடப்படுகின்றன என்று கூறிய அவர், மற்ற நாணயங்கள் ஓரளவுக்கு வளர்ச்சியைக் கண்டாலும், அவை இன்னும் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

உதாரணத்துக்கு, ஆசிய பசிபிக் மற்றும் ஐரோப்பாவில் சீன நாணயமான ரென்மின்பியின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும் உலகளாவிய வர்த்தகப் பரிவர்த்தனைகளில் அதன் பங்கு இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது.

சிங்கப்பூரின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் அமெரிக்காவும் ஒன்று என்பதையும் திரு டான் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்