தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி பாதையில் சேவை திரும்பியது

2 mins read
405672de-4874-425c-b168-942ff4b0d378
இலகு ரயில் (எல்ஆர்டி) சேவை. - கோப்புப்படம்: சாவ்பாவ்

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் (எல்ஆர்டி) பாதையில் ரயில் சேவை திரும்பியுள்ளது.

அப்பாதை முழுவதும் வியாழக்கிழமை (ஜூலை 3) காலை சேவைத் தடை ஏற்பட்டது. மின்சாரக் கோளாறு காரணமாக அந்தப் பாதை முழுவதும் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக சேவை தடைப்பட்டது.

புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி பாதையில் உள்ள அனைத்து 13 நிலையங்களையும் பாதித்துள்ள சேவைத் தடை குறித்து எஸ்எம்ஆர்டி நிறுவனம் வியாழக்கிழமை காலை 9.13 மணியளவில் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. சேவைத் தடை காலை சுமார் 8.50 மணிக்கு நிகழ்ந்ததாகவும் அது குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கு வெளியே இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படுவதாகவும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

பிரச்சினையைச் சரிசெய்ய தங்கள் ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவிவருவதாகவும் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் கழித்து எஸ்எம்ஆர்டி பதிவிட்டது.

“ஒட்டுமொத்த புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி பாதையிலும் ரயில் சேவை இல்லை. பயணிகளுக்குத் தெரியப்படுத்த ரயில்களுக்குள்ளும் ரயில் நிலையங்களிலும் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன,” என்று எஸ்எம்ஆர்டி கூறியது.

“உங்கள் பயணத்துக்கு ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம், உங்கள் பொறுமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றும் எஸ்எம்ஆர்டி பதிவிட்டது.

முதன்முறையாக இலகு ரயிலில் பயணம் செய்யலாம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருந்த பிலிப்பின்ஸ் சுற்றுப்பயணி போதகர் ரமீரோவுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

எனினும், அடிக்கடி நடக்காத வரையிலும் ரயில் சேவைக் கோளாறுகள் இயல்புடையவையே என்றார் அவர்.

“மற்ற வழிகளிலும் பயணம் செய்யலாம். இங்கு பேருந்துகள் உள்ளன; அல்லது டாக்சியில் செல்லலாம். பெரும் பாதிப்பு இல்லை,” என்றார் அவர்.

தாதியாகப் பணியாற்றும் தாமரைச் செல்வி, ரயில் சேவைத் தடை ஏற்பட்டதாகத் தெரிந்ததும் தன் பணியிடத்துக்கு நடந்தே சென்றுவிட்டார்.

கூடுதல் செய்தி - ரவி சிங்காரம்

குறிப்புச் சொற்கள்