தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விலை அதிகமாக இருப்பதால் ‘‌ஷிங்கல்ஸ்’ தடுப்பூசிக்கு மானியம் இல்லை

2 mins read
26d00963-f3e0-4484-a251-bdaa16481178
‘‌ஷிங்கல்ஸ்’ தடுப்பூசி தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சு பதிலளித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘‌அக்கி அம்மை’ (Shingles) கிருமித்தொற்றுக்கான தடுப்பூசியை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படாததற்கு, அதன் விலை அதிகமாக இருப்பது காரணம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தோலில் கொப்புளங்களை ஏற்படுத்தும் அக்கி தொற்றுக்கான ஷிங்கிரிக்ஸ் (Shingrix) தடுப்பூசியை இருமுறை போடுவதற்கு ஆகும் செலவு, பொருள், சேவை வரி மற்றும் மருத்துவரை நாடுவதற்கான கட்டணம் ஆகியவை உட்பட 720லிருந்து 950 வெள்ளி வரை இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. முதல் தடுப்பூசி போட்டு ஆறு மாதங்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.

“தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனம் பரிந்துரைக்கும் விலையைக் கருத்தில்கொள்ளும்போது ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கு அதைப் போடுவது கட்டுப்படியாகாது,” என்று கடந்த நவம்பர் மாதம் 12ஆம் தேதியன்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சு பதிலளித்தது.

ஹாலந்து-புக்கிட் தீமா நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டஃபர் டி சூஸா, பெரியவர்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தில் அக்கி தடுப்பூசியைச் சேர்த்துக்கொள்ள சுகாதார அமைச்சு எண்ணம் கொண்டுள்ளதா என்று நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அந்தத் தடுப்பூசிக்கு மானியம் வழங்கப்படுமா என்றும் அவர் கேட்டிருந்தார். குறிப்பாக கிருமித்தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் அதிகம் உள்ள மூத்தோருக்கு மானியம் கிடைக்குமா என்று அவர் கேட்டிருந்தார்.

பிரிட்டனின் ஜிஎஸ்கே மருந்து நிறுவனம் தயார் செய்யும் ‌ஷிங்கிரிக்சை சிங்கப்பூரில் பயன்படுத்த 2021ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அந்தத் தடுப்பூசி அக்கி தொற்றுக்கு எதிராக 90 விழுக்காட்டுப் பாதுகாப்பை வழங்குகிறது. எனினும், வயது அதிகமானவர்கள், உடலின் நோய்த் தடுப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு அந்தத் தடுப்பூசியால் கிடைக்கும் பாதுகாப்பு குறைவாக இருக்கலாம்.

‌ஷிங்கிரிக்ஸ் தடுப்பூசி தரும் பாதுகாப்பு குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு நீடிக்கும். அமெரிக்காவில் பயன்படுத்த முதன்முதலில் அதற்கு 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே சின்னம்மை (chicken pox) தொற்றுக்கு ஆளானவர்களுக்குத்தான் அக்கி தொற்று ஏற்படும் வாய்பபு உள்ளது. இரண்டும் ஒரே கிருமியால் ஏற்படுவது அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்