காஸாவில் நடந்த சண்டையின்போது, சிங்கப்பூரர்கள் இருவர் இஸ்ரேலியத் தற்காப்புப் படைக்காகச் சண்டையிட்டதை உறுதிசெய்யப் போதுமான தகவல்கள் இல்லை என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் கூறியிருக்கிறார்.
பிரிட்டிஷ் புலனாய்வு இதழியல் நிறுவனமான ‘டிகிளாசிஃபாய்ட் யுகே’ (Declassified UK) வெளியிட்ட அறிக்கை குறித்து, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அவர் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
“ஓர் இஸ்ரேலியருடனும் மற்றொரு நாட்டைச் சேர்ந்த குறைந்தது ஒருவருடனும் 50,000க்கும் அதிகமான இஸ்ரேலியத் தற்காப்புப் படையினர்” காஸா சண்டையில் ஈடுபட்டதாக இஸ்ரேலியத் தற்காப்புப் படையின் புள்ளிவிவரங்கள் காட்டியதாக அந்த நிறுவனம் கூறியது.
அவர்களில் சிங்கப்பூர்க் கடப்பிதழை வைத்திருக்கும் இரண்டு சிங்கப்பூரர்களும் அடங்குவர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் இஸ்ரேலியக் குடியுரிமை வைத்திருக்கும் சிங்கப்பூரர்; மற்றொருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமைகளை வைத்திருப்பவர் என்று அறிக்கை கூறியது.
“நமது நிலைப்பாடு எப்போதும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருந்துள்ளது. சிங்கப்பூர் சம்பந்தப்படாத எந்தவோர் ஆயுதமேந்திய வெளிநாட்டுப் பூசலிலும் சிங்கப்பூரர்கள் ஈடுபடக்கூடாது. நமது விசுவாசம் சிங்கப்பூருக்கு மட்டுமே இருக்கவேண்டும். சிங்கப்பூர்த் தற்காப்புக்கு மட்டுமே நாம் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்,” என்றார் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம்.
“ஆயுதமேந்திய வெளிநாட்டுப் பூசல்களில் சிங்கப்பூரர்கள் சண்டையிட்டதாகவோ சண்டையிடத் திட்டமிடுவதாகவோ கண்டுபிடிக்கப்பட்டால், நமது சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
“நாம் இதை முன்பே தெரிவித்திருக்கிறோம். அதே காரணத்திற்காக, கடந்தகாலத்தில் நாம் சிலரைத் தடுத்துவைத்துள்ளோம்,” என்று அமைச்சர் கூறினார்.
“நமது தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக அமையும் நபர்களுக்கு எதிராக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமைகளை வைத்திருப்போருக்குச் சிங்கப்பூர்க் குடியுரிமை ரத்துசெய்யப்படலாம்,” என்றார் திரு சண்முகம்.

