தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் உந்துதல் தந்ததாகக் கூறும் நோபெல் வெற்றியாளர்

2 mins read
வேதியியல் துறைக்கான நோபெல் பரிசைப் பெற்றவர்
0eec5f1a-f367-4087-8671-b22a964cb00b
டாக்டர் டெமிஸ் ஹஸாபிஸ். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

இந்த ஆண்டு (2024) வேதியியல் துறைக்கான நோபெல் பரிசைப் பெற்றுள்ள டாக்டர் டெமிஸ் ஹசாபிஸ், தொழில்நுட்பத்தில் தமது ஆர்வத்துக்கு சிங்கப்பூர் உந்துதல் தந்ததாகக் கூறியுள்ளார்.

சீன இனத்தவரான இவரது தாயார் சிங்கப்பூரர்; தந்தை சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கிரேக்கர். இருவரும் ஆசிரியர்கள்.

48 வயதாகும் டாக்டர் ஹசாபிஸ் லண்டனின் வடக்குப் பகுதியில் பிறந்தவர். 10 வயது வரை கோடைக்காலங்களை இவர் சிங்கப்பூரில் கழித்ததாகக் கூறுகிறார்.

அக்டோபர் 9ஆம் தேதி அவருடன் டாக்டர் ஜான் ஜம்ப்பர், டாக்டர் டேவிட் பேக்கர் ஆகியோருக்கும் வேதியியல் துறைக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

புரதங்களின் சிக்கலான கட்டமைப்பைக் கணிக்கக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்துக்காக அவர்களுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவாற்றலையும் உள்ளடக்கியது.

டாக்டர் ஹசாபிஸ் தோற்றுவித்த ‘டீப்மைண்ட்’ (DeepMind) எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைப் பின்னர் 650 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (848 மில்லியன் வெள்ளி) கூகல் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஹசாபிசுக்கும் அவருடன் கூகல் ‘டீப்மைண்ட்’ நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிய டாக்டர் ஜம்ப்பருக்கும் புரதங்கள், நொதிப்பொருள்கள் (enzymes) ஆகியவற்றின் வடிவத்தை விரைவாகவும் நம்பகமான வகையிலும் கணிக்கக்கூடிய தொழில்நுட்பத்துக்காக நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் பல்வேறு மருந்துகளின் கண்டுபிடிப்பையும் புதிய உயிரியல் கருவிகளின் உருவாக்கத்தையும் விரைவுபடுத்தியுள்ளது.

சிறுவயதில் சிங்கப்பூரில் கழித்த காலங்களை நினைவுகூரும் டாக்டர் ஹசாபிஸ், காணொளி விளையாட்டுகள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் தமக்குப் பேரார்வத்தை ஊட்டியதாகக் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்