‘ஓ’ நிலைத் தேர்வின்போது இரைச்சலால் இடையூறு

கேட்டல் கருத்தறிதல் தேர்வில் பள்ளிகள் ஒலிப்பதிவை மீண்டும் ஒலிபரப்பின

‘ஓ’ நிலைத் தேர்வின்போது இரைச்சலால் இடையூறு

2 mins read
3fd8d1af-3857-46bf-8953-95bf71cce497
படம்: - பிக்சாபே

சிங்கப்பூரில் அக்டோபர் 16ஆம் தேதி ஜிசிஇ சாதாரண நிலைத் (‘ஓ’ நிலை) தேர்வுகளின் ஆங்கில மொழிக் கேட்டல் கருத்தறிதல் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், சில பள்ளிகளில் ஒலிப்பதிவு மீண்டும் ஒலிபரப்பப்பட்டதாக இணையத்தில் கூறியுள்ளனர்.

ரெட்டிட் தளத்தின் இணையக் கலந்துரையாடல் பகுதியில் மாணவர்கள் அதுகுறித்து எரிச்சலைப் பதிவிட்டனர்.

குறிப்பிட்ட அந்தப் பள்ளிகளின் மாணவர்களுக்கு இது நியாயமற்ற முறையில் சலுகையாக அமையக்கூடும் என்று அந்த மாணவர்கள் கருத்துரைத்தனர்.

ஊடகத்தினர் இதன் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு அக்டோபர் 18ஆம் தேதி பதிலளித்த சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் (SEAB), ஐந்து பள்ளிகளில் ஓரிரு வகுப்பறைகளில் ஒலிப்பதிவு மீண்டும் ஒலிபரப்பப்பட்டதாகக் கூறியது.

மணியடித்தல், கனரக வாகனங்கள், ஒலிபெருக்கியில் பின்னணியில் கேட்ட தெளிவற்ற ஓசை போன்றவற்றால் அவ்வாறு செய்ய நேரிட்டதாகக் கூறப்பட்டது.

மொத்தம் 140 நிலையங்களில் ‘ஓ’ நிலை கேட்டல், கருத்தறிதல் தேர்வுகள் நடத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் நியாயமான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் குறிப்பிட்ட ஒலிப்பதிவை மீண்டும் ஒலிபரப்புவதற்குத் தேர்வு நிலையங்களுக்கு அனுமதி உண்டு என்று கழகம் கூறியது.

தேர்வு நிலையத்தில் இருப்போர் அவ்வாறு மறுஒலிபரப்பு தேவையா என்பதைச் சூழலின் அடிப்படையில் மதிப்பிட்டு முடிவெடுப்பர் என்று அது சொன்னது.

ஆங்கிலோ-சீனத் தன்னாட்சிப் பள்ளியில் (ACSI) மறுஒலிபரப்பு செய்யப்பட்டது குறித்து இணையத்தில் குறிப்பிடப்பட்ட பதிவிற்கு மாணவர்கள் பலரும் கருத்துரைத்திருந்தனர். அந்தப் பதிவு தற்போது அகற்றப்பட்டுவிட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூப் பதிவர் அந்த ஒலிப்பதிவைத் தயாரித்ததாகத் தவறாகப் புரிந்துகொண்டு மாணவர்கள் அவரின் யூடியூப் கணக்கில் வெறுப்பை வெளிப்படுத்தும் கருத்துகளைப் பதிவுசெய்ததாகக் கூறப்பட்ட நிலையில் அந்தப் பதிவர் ஒலிப்பதிவைத் தயாரிக்கவில்லை என்பதைக் கழகம் தெளிவுபடுத்தியது.

குறிப்புச் சொற்கள்