சிங்கப்பூர் நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட சிறப்புத் தேர்வுக் குழுவிடம் 57 நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களின் (NMP) பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டில் நியமன உறுப்பினர்களுக்கான பதவி அறிமுகம் செய்யப்பட்டது. அதுமுதல் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இந்தப் பட்டியலே இரண்டாவது ஆக அதிகப் பெயர்களை உள்ளடக்கியுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட பெயர்களின் மொத்த எண்ணிக்கையை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) வெளியிடப்பட்ட அறிக்கையில் நாடாளுமன்ற அலுவலக அதிகாரி உறுதிப்படுத்தினார். பெயர்களின் பட்டியல் வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு பெறப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான பரிந்துரைகளை அக்டோபர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதிக்குள்ளாக சமர்ப்பித்திருக்கவேண்டும்.
இவ்வாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக தனித்தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியுற்ற திரு டேரில் லோ, திரு ஜெரமி டான் ஆகிய இருவரும் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் தவிர்த்து, வர்த்தகங்கள், தொழில்துறைகள், தொழிலாளர் இயக்கம், நிபுணர்கள், சமூக சேவையாற்றும் அமைப்புகள், கல்விக் கழகங்கள், ஊடகங்கள், கலைகள் சார்ந்த மன்றங்கள், விளையாட்டு மையங்கள் என பலதரப்பட்டோரிடம் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன.

