இவ்வாண்டுப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (ஏப்ரல் 23) காலை 11 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.
தாங்கள் போகவேண்டிய வேட்புமனுத் தாக்கல் நிலையங்ளுக்கு முன்னரே செல்லுமாறு வேட்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஒன்பது வேட்புமனுத் தாக்கல் நிலையங்கள் உள்ளன: பெண்டமியர் தொடக்கப் பள்ளி, சோங்ஃபு பள்ளி, டேயி உயர்நிலைப் பள்ளி, ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி, கோங் ஹுவா பள்ளி, மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி, நன் ஹுவா ஹை பள்ளி, போய் சிங் பள்ளி, யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளி ஆகியவையே அந்த ஒன்பது நிலையங்கள்.
ஆதரவாளர்கள், பொதுமக்கள் காலை 10 மணிக்குப் பிறகுதான் வேட்புமனுத் தாக்கல் நிலையங்களுக்குப் போகலாம். 10 மணிக்குப் பிறகுதான் வேட்புமனுத் தாக்கல் நிலையங்கள் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
வேட்புமனுத் தாக்கல் நிலையங்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வேட்புமனுத் தாக்கல் நிலையங்களில் பாதுகாப்புச் சோதனைகளுக்குத் தயாராய் இருக்குமாறும் பெரிய பைகளைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
துப்பாக்கிகள், ‘நக்கல் டஸ்டர்’ ஆயுதம் போன்ற அபாயகரமான பொருள்களைக் கொண்டு செல்லக்கூடாது.
வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும் பதாகைகள், கொடிகள் போன்றவற்றை ஏந்துவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும், வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று எல்லா வேட்புமனுத் தாக்கல் நிலையங்களிலும் காலை ஒன்பது மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணிவரை தற்காலிகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி (Temporary Restricted Area) இருக்கும். அப்பகுதிகளில் சிங்கப்பூர் சிவில் விமாத்துறை ஆணையம் (CAAS) அனுமதி தரப்படாத, ஆளில்லா வானூர்திகளைச் செலுத்துவது, பட்டம் விடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.