அறியப்படாத நாயகர் விருதுகளுக்கு முன்மொழியலாம்

அறியப்படாத நாயகர் விருதுகளுக்கு முன்மொழியலாம்

2 mins read
c28cbeb6-2311-4289-b88a-1810d6180c9b
இவ்வாண்டுக்கான அறியப்படாத நாயகர் விருகளுக்குத் தனிநபர்களை முன்மொழிவதற்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (மார்ச் 5) மாநாடு ஒன்றில் திறந்துவிடப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டுக்கான அறியப்படாத நாயகர் விருதுகளுக்குத் (Singapore Silent Heroes Awards) தனிநபர்களை முன்மொழிய விண்ணப்பங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 5) நடைபெற்ற ‘மனித குலத்தின் மீதான தாக்கம்’ (Impact for Humanity Symposium) எனும் மாநாட்டில் இது அறிவிக்கப்பட்டது. தங்களது சமூகங்களுக்குள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியோரைப் பொதுமக்கள் முன்மொழியலாம்.

விருது பெறுவதற்கான இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறுவோரைப் பற்றி அறியப்படாத நாயகர் அமைப்பின் மின்னிலக்கத் தளங்களில் தகவல்கள் வெளியிடப்படும். பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுயேச்சை நீதிபதிகள் குழு ஒன்று, விருது பெறுவோரைத் தேர்ந்தெடுக்கும். வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள அறியப்படாத நாயகர் விருது நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். மனித நேயத்தின் இதயத் துடிப்பு, ஊக்குவிக்கும் இளையர், அசாதாரணத் தேர்ச்சி பெறும் பெரியவர், மாற்றம் கொண்டுவரும் உறுதியுடன் செயல்படும் முன்னோடி, இரக்க குணம்கொண்ட வெளிநாட்டவர் (Heart of Humanity, Inspiring Youth, Outstanding Adult, Pioneer of Promise, Compassionate Foreigner) ஆகியவை இந்த ஐந்து பிரிவுகளாகும்.

அறியப்படாத நாயகர் விருதுகள் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கீகாரம், வெகுமதி என எதையும் எதிர்பாராமல் பிறருக்குச் சேவை செய்வதன் தொடர்பில் கருணை, துணிச்சல், அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தனிநபர்களை அறியப்படாத நாயகர் விருதுகள் அங்கீகரிக்கின்றன.

அன்றாட நடவடிக்கைகளின் மூலம் சிங்கப்பூரில் மேலும் வலுவான, மீள்திறன்கொண்ட சமூகங்களை உருவாக்குவோரை இவ்விருதுகள் அங்கீகரித்து வருகின்றன.

அறியப்படாத நாயகர் விருதுகள் தொடங்கப்பட்டதிலிருந்து 1,200க்கும் அதிகமானோரைப் பொதுமக்கள் முன்மொழிந்துள்ளனர். இதுவரை 62 தனிநபர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

‘மனித குலத்தின் சக்தி’ எனும் கருப்பொருளை ‘மனித குலத்தின் மீதான தாக்கம்’ மாநாடு கொண்டிருந்தது. சமூகக் கொள்கைகள் எவ்வாறு அன்றாட முடிவுகள், நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் மாநாடு கவனம் செலுத்தியது. குறிப்பாக இளையர்களுக்கு இது பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்