உள்ளூர், தனியார் நிறுவனங்களுக்கான என்டர்பிரைஸ் 50 (E50) விருதுகள் 2025க்கு முன்மொழியலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆக அதிக புத்தாக்கமும் போட்டித்தன்மையும் நிறைந்த 50 நிறுவனங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.
‘த பிசினஸ் டைம்ஸ்’, ‘கேபிஎம்ஜி சிங்கப்பூர்’ இணைந்து வழங்கும் இந்த வருடாந்தர விருது, சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்த நிறுவனங்களை அங்கீகரிக்கிறது.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம், சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பு, சிங்கப்பூர் எக்சேஞ்ச் குழுமம் (SGX) ஆகியவற்றின் ஆதரவுடன் 31வது ஆண்டாக வழங்கப்படவிருக்கும் ‘இ50’ விருதுகளுக்கு ஓசிபிசி வங்கி நிதியாதரவு வழங்குகிறது.
மீள்திறன், முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லும் தலைமைத்துவம் போன்ற அம்சங்களில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை இந்த விருது சிறப்பிக்கிறது.
முன்மொழியப்படும் நிறுவனங்கள் அவற்றின் நிதிச் செயல்பாடு, வர்த்தக உத்தி, நிர்வாகம், வளர்ச்சிக்கான ஆற்றல் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
வெற்றியாளர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் ‘இ50’ விருதளிப்பு விழாவில் விருதுகளைப் பெற்றுக்கொள்வர்.
அடையாளம் காணப்படும் வெற்றியாளர்கள் மற்ற தொழில்முனைவோர்க்கும் நிறுவனங்களுக்கும் உந்துசக்தியாக விளங்குவர் என்றும் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்குப் பங்களிப்பர் என்றும் நம்புவதாக ‘த பிசினஸ் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் செங் ஹுய்ஃபென் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புத்தாக்கம் என்பது போட்டியில் முன்னிலை வகிப்பது மட்டுமன்று. குறிக்கோளுடன் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களை அமைத்தல், வாய்ப்புகளைக் கைப்பற்றுதல், சிக்கலான உலகச் சூழலில் தனித்துவமான விழுமியத்தை உருவாக்குதல் ஆகியவை தொடர்பானது என்று ‘கேபிஎம்ஜி சிங்கப்பூர்’ நிறுவனத் தலைவர் சியு வு ஹோங் குறிப்பிட்டார்.
‘த பிசினஸ் டைம்ஸ்’, ‘கேபிஎம்ஜி சிங்கப்பூர்’ இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் அவர்கள் அவ்வாறு கருத்துரைத்தனர்.

