சொத்து, சூதாட்ட நிலையம் உள்ளிட்ட நிதித் துறை சாராத துறைகளும் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தின் அதி உயர் ஆபத்தை எதிர்கொள்வதாக, சிங்கப்பூரின் சட்ட விரோத பணப்பரிமாற்றத்துக்கு எதிரான கட்டமைப்பின் மறு ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், நிறுவன சேவை வழங்குநர்கள், உரிமம் பெற்ற அறக்கட்டளை (டிரஸ்ட்) நிறுவனங்கள், உயர் ரகக் கற்கள், உலோகத் துறை என்பன மோசடி மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல் என்பனவற்றின் மூலம் சுரண்டப்படுவதற்கான உயர் ஆபத்தைக் கொண்டிருப்பதாக ஜூன் 20 அன்று வெளியிடப்பட்ட தேசிய சட்ட விரோத பணப்பரிமாற்ற தேசிய ஆபத்து ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிதி, வங்கித் துறைகளில், சொத்து நிர்வாகம் உள்பட்ட வங்கிச் சேவைகள், சிங்கப்பூரில் ஆக அதிகமாக உயர் பண மோசடி அபாயங்களை எதிர்கொள்கின்றன. மின்னிலக்க பணம் செலுத்துதல் சேவை வழங்குநர்கள் சம்பந்தப்பட்ட பண மோசடிகள் அதிகரித்துள்ளது என்பதையும் அறிக்கை சுட்டியது.
மின்னிலக்கக் கட்டணச் சாதனங்களில் மின்னிலக்க நாணயங்களும் அடங்கும்.
அனைத்துலக நிதி மையமாகவும் அதிகம் வெளிப்புறம் சார்ந்த பொருளியலைக் கொண்ட வர்த்தக மையமாகவும் சிங்கப்பூர் விளங்குவதால் சட்டவிரோத நிதி, சொத்து பரிமாற்றத்தை நாடும் குற்றவாளிகளுக்கு ஏதுவாக உள்ளது என்று உள்துறை அமைச்சு, நிதி அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
“குற்றவாளிகள் தங்கள் சட்டவிரோத நிதியைச் சொத்துச் சந்தை அல்லது மதிப்புமிக்க கற்கள், உலோகங்கள் போன்ற பிற சொத்துகளாக மாற்றுவதற்கான இடமாக சிங்கப்பூர் அபாயத்தை எதிர்கொள்கிறது.
“பொருளியல், புவிசார் அரசியல் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த அபாயங்களை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் அதிகரித்துள்ள தொழில்நுட்பப் பயன்பாடு எல்லைகளில் விரைவான, பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு உதவியுள்ளது. பெரும்பாலும் அதிநவீன பண மோசடி கட்டமைப்பு, ஏற்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன,” என்று அதிகாரிகள் கூறினர்.
முக்கிய பண மோசடி அச்சுறுத்தல்கள், குறிப்பாக வெளிநாட்டு, உள்நாட்டு இணைய மோசடிகள் மூலம் ஏற்படுகின்றன. இவை பொதுவாக வெளிநாடுகளில் இயங்கும் சட்டவிரோதக் குழுக்களால் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“வெளிநாட்டு தொடர்புடைய மற்ற பண மோசடி அச்சுறுத்தல்களாக, திட்டமிட்ட குற்றச்செயல், ஊழல், வரிக் குற்றங்கள், வர்த்தக அடிப்படையிலான பண மோசடி போன்றவை அடங்கும்,” என்று அதிகாரிகள் கூறினர்.
நிதி நடவடிக்கை பணிக் குழுவில் சிங்கப்பூரின் ஈராண்டு கால தலைமைத்துவம் 2024 ஜூன் இறுதியில் முடிவுக்கு வரும் நிலையில், இந்த ஆபத்து மதிப்பீடு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கையின் மூலம் 2025 ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூரின் சட்ட விரோத பணப்பரிமாற்ற கட்டமைப்பை இக்குழு மீண்டும் ஆய்வு செய்யும்.

