வடகிழக்கு பயணிகள் ஜனவரி 2 முதல் அதிக சலுகைகள் பெறுவர்

3 mins read
be036733-0569-4468-9742-af234e05702d
காலைநேர நெரிசலின்போது எம்ஆர்டி கட்டமைப்பின் பரபரப்பான பகுதிகள் தவிர்க்கப்படுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதிவாசிகள், ஜனவரி 2ஆம் தேதி முதல் ரயிலுக்குப் பதிலாக, தேர்ந்து எடுக்கப்பட்ட விரைவுப் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தும்போது, ​​வார நாள்களின் காலை வேளையில், அவர்களது கட்டணத்தில் அதிக தள்ளுபடியைப் பெறுவார்கள்.

முதல் முறையாக, பயணக் கட்டணத்தில் 80% வரையிலான தள்ளுபடிகள் ரயில் பயணங்களுக்கும் பொருந்தும். காலை 7.15 மணி முதல் 8.45 மணி வரை அதிக நெரிசலைத் தவிர்க்க, வடகிழக்கில் இருந்து தகுதிபெறும் ரயில் பயணிகள் தங்கள் காலைப் பயணங்களை மாற்றி அமைக்கும்போது இந்தத் தள்ளுபடிகளைப் பெறலாம்.

காலை நேர நெரிசலின்போது எம்ஆர்டி கட்டமைப்பின் பரபரப்பான பகுதிகளைத் தவிர்க்க பயணிகளை ஊக்குவிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் டிசம்பர் 20ஆம் தேதி கூறியது. இது, தகுதிபெற்ற பங்கேற்பாளர்களுக்குப் புள்ளிகளை வழங்கும் ‘டிராவல் ஸ்மார்ட் ஜர்னிஸ்’ (டிஎஸ்ஜே) (Travel Smart Journeys) திட்டத்தின் மேம்பாடாகும்.

இந்தப் புள்ளிகளை மின்னணுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளாகவோ அல்லது பொதுப் போக்குவரத்திற்குப் பணம் செலுத்த, வங்கி அட்டைகளைப் பயன்படுத்துபவர்களுக்கான கடன்பற்றாகவோ மீட்டு எடுக்கலாம்.

நெரிசல் மிகுந்த வடகிழக்குப் பாதையின் கூட்டநெரிசலைக் குறைக்க உதவும் வகையில், இந்தத் திட்டம் 2020ல் சோதனையாகத் தொடங்கப்பட்டு 2023ல் விரிவுபடுத்தப்பட்டது.

வரவிருக்கும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஏதுவாக, இது நவம்பர் 25ஆம் தேதி அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அது இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு, திட்டத்தில் சுமார் 21,000 தகுதியுள்ள பங்கேற்பாளர்கள் இருந்தனர்.

ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் அது தொடங்கும்போது, ​​டிஎஸ்ஜே ஊக்குவிப்புத் திட்டம் முன்பைவிட நான்கு கூடுதல் விரைவு பேருந்துச் சேவைகளை உள்ளடக்கி, மொத்த எண்ணிக்கையை 11 ஆகக் கொண்டு வரும் என்று ஆணையம் தெரிவித்தது.

தற்போதுள்ள சிடிஎஸ் (CDS) 660 விரைவுப் பாதையின் மாறுபாடான சிடிஎஸ் 660M சேவையையும் ​​டிஎஸ்ஜே திட்டம் உள்ளடக்கும்.

இத்திட்டத்தின்கீழ் உள்ள அனைத்து விரைவுப் பேருந்து சேவைகளும் வடகிழக்கு சிங்கப்பூரை, மத்திய வர்த்தக வட்டாரம், மெக்பர்சன், பாய லேபார் ஆகிய முக்கிய வேலைவாய்ப்பு மையங்களுடன் இணைக்கின்றன.

2024ஆம் ஆண்டின் முற்பாதியில், வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் தினசரி சராசரியாக 588,000 பயணிகள் பயணம் செய்தனர். 2019ல் 2.2% அதிகமாக நாள்தோறும் 601,000 பயணிகள் பயணம் செய்தனர்.

திட்டத்தின் முந்தைய வடிவமைப்பின்கீழ், காலை 7 மணி முதல் 9 மணி வரை தகுதியான விரைவுப் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்திய பங்கேற்பாளர்களுக்கு ஒரு பயணத்திற்கு $1.50 மதிப்புள்ள புள்ளிகள் வழங்கப்பட்டன. ஜனவரி 2 முதல் இது பயணக் கட்டணத்தில் 80 விழுக்காடாக உயரும்.

திட்டத்தில் ரயில் பயணங்களைச் சேர்ப்பது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். எனவே பொங்கோல் கோஸ்ட், செங்காங், பொங்கோல், புவாங்கோக், ஹவ்காங் எம்ஆர்டி நிலையங்களில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கும் பயணிகளும் தள்ளுபடிக்குத் தகுதிபெறுவார்கள்.

அவர்கள் பயணம் செய்யும் நேரத்தைப் பொறுத்து, தகுதியான பயணிகள் தங்கள் ரயில் கட்டணத்தில் 40% அல்லது 80% தள்ளுபடி பெறுவார்கள்.

வாரநாள்களில் காலை 7.45 மணிக்கு முன் நாடளாவிய ரீதியில் உள்ள எம்ஆர்டி நிலையங்களில் பயணத்தைத் தொடங்குபவர்களுக்குத் தற்போது வழங்கப்படும் 50 காசு வரையிலான தள்ளுபடிக்கு மேல் இது வழங்கப்படுகிறது.

டிஎஸ்ஜே ஊக்கத்தொகைகளுக்குத் தகுதிபெற, பயணிகள் பொங்கோல் கோஸ்ட்க்கும் ஹவ்காங்குக்கும் இடையே உள்ள வடகிழக்கு நிலையத்திலோ அல்லது பொங்கோல், செங்காங் எல்ஆர்டி வழித்தடங்களில் உள்ள ஏதேனும் ஒரு நிலையத்திலோ, கடந்த 30 நாள்களில் குறைந்தது ஆறு வேலை நாள்களில் காலை 7.15 முதல் 8.45 மணி வரை பயண அட்டையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

வடக்கு-கிழக்குப் பகுதியில் இப்போது கவனம் செலுத்தப்படும் வேளையில், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ஓர் ஊடக நேர்காணலின்போது போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், டிஎஸ்ஜே திட்டத்தை எதிர்காலத்தில் மற்ற ரயில் பாதைகளுக்கு விரிவுபடுத்துவதற்கான சாத்தியத்தையும் குறிப்பிட்டார்.

பேருந்துகள் மற்றும் எம்ஆர்டி ஆகியவற்றின் உச்சத் தேவையை மற்ற பகுதிகளுக்குப் பிரித்து விடுவதே இலக்கு என்று திரு சீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்