வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம்

வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம்

படம்: கிறிஸ்டோ லியோன்

11 Nov 2026 - 5:30 am

2 mins read

குடியிருப்பாளர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம், தான் மேற்கொள்ளும் முயற்சிகளை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவில் எடுத்துக்காட்டியது.

அக்டோபர் மாதம் முழுதும் நடைபெற்ற வடமேற்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவில், பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன் முக்கிய நிகழ்ச்சி, அக்டோபர் 23, 24ஆம் தேதிகளில் நார்த்பாயின்ட் சிட்டி வணிக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் முன்வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியிருப்பாளர்கள் டிக்டாக் காணொளிகளின் உருவாக்கம், செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் நேரடி அனுபவத்தைப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் திறன், ஆர்வம்குறித்துப் பொதுமக்கள் அறிந்துகொள்ளவும் தொழில்துறை வழிகாட்டிகளிடமிருந்து தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெறவும் வாய்ப்பளிக்கப்பட்டது. வேலை தேடுவோருக்கு அவர்கள் குடியிருக்கும் வட்டாரத்துக்கு அருகில் வேலைகளை அடையாளம் காண அந்நிகழ்சியிலேயே ஆலோசகர்கள் உதவினர்.

“வேலைவாய்ப்பு, தொழில் ஆலோசனை, கற்றல் வாய்ப்புகளை குடியிருப்பாளர்களுக்குக் கொண்டுசெல்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். தொடர்ந்து மாற்றம் கண்டு, வளர்ந்துவரும் வேலைச் சூழலுக்கு ஏற்ப, தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள அவர்களை ஊக்குவித்தோம்,” என்றார் வடமேற்கு மாவட்ட மேயர் அலெக்ஸ் யாம். 

பொதுமக்கள் செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சிகுறித்து உற்சாகமாக இருப்பதுடன் கவலையும் கொண்டுள்ளனர். இருப்பினும், இந்த ஆண்டின் தேசிய தினப் பேரணியில் பிரதமர் கூறியதைப் போல, சிங்கப்பூரர்களுக்குப் பாடவகுப்புகளை வழங்குவதோடு, அவர்களின் திறன்களுக்கு ஏற்ற வேலைகளுடன் அவர்களை இணைப்பதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது என்று திரு அலெக்ஸ் குறிப்பிட்டார்.

குடியிருப்பாளர்களுக்கு மட்டுமின்றி, நிறுவனங்களுக்கும் சமூக மேம்பாட்டு மன்றம் ஆதரவளித்து வருகிறது என்பது தெரியவந்துள்ளது. 

உயர்கல்வி நிலையத்தார், தொழில்துறை நிபுணர்கள், முதலாளிகள், பயிற்சி வழங்குநர்கள் ஆகியோருடன் இணைந்து இவ்வாண்டு நிகழ்ச்சிகளை வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்தது. அக்டோபர் மாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நவம்பரில் கிளாட் ஏஐ (Claude AI), செயற்கை நுண்ணறிவு தொடர்பான இணையவழிக் கருத்தரங்குகளும் நடைபெறவிருந்தன. 

இவ்விழாவுக்கும் அப்பால், குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுத் தேவைகளுக்கும் நிறுவனங்களின் ஊழியர் பயிற்சித் தேவைகளுக்கும் மன்றம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது என்ற கருத்தும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. 

குறிப்புச் சொற்கள்