‘நிஞ்சா ஆமை’ அல்ல: திருக்கை மீனை முதுகில் ஏற்றிச்சென்ற மோட்டார்சைக்கிளோட்டி

2 mins read
70a726f5-e93a-428a-b04a-1467978dd5e0
முதுகில் பெரிய திருக்கை மீனை ஏற்றிச்சென்ற இவரின் படம் இவ்வாரத் தொடக்கத்தில் இணையத்தில் பரவியது. - படம்: கேரி சிம்

இந்த மோட்டார்சைக்கிளோட்டி ஆமைக்கூடு அணிந்த ‘நிஞ்சா’ கதாபாத்திரம்போல் காட்சியளித்தாலும், எதிர்வரவிருக்கும் ‘டீனேஜ் மியூடன்ட் நிஞ்சா டர்ட்டல்ஸ்: மியூடன்ட் மேஹம்’ திரைப்படத்திற்காக விளம்பரம் செய்யவில்லை.

முதுகில் பெரிய திருக்கை மீனை ஏற்றிச்சென்ற இவரின் படம் இவ்வாரத் தொடக்கத்தில் இணையத்தில் பரவியது. படத்தைப் பார்த்த பலரும், நிஞ்சா ஆமை கதாபாத்திரத்துடன் அவரை ஒப்பிட்டனர்.

பாசிர் ரிஸ் இன்டஸ்ட்ரியல் டிரைவ் 1 சாலை சந்திப்பில், 25 கிலோகிராம் எடையுள்ள திருக்கை மீனை ஒருவர் மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்றதாக பெரித்தா ஹரியான் மலாய் செய்தித்தாள் தெரிவித்தது.

அந்த 36 வயது ஆடவர், ஜூலை 22ஆம் தேதி காலை மூன்று திருக்கை மீன்களைப் பிடித்தார். ‘புராட் காவ்டேல்’ வகையைச் சேர்ந்த மற்ற இரு திருக்கை மீன்களின் எடை முறையே 19 கிலோ மற்றும் 61 கிலோ.

மூன்று மீன்களையும் அவரும் அவரது நண்பர்களும் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் மீனைப் பகிர்ந்துகொண்டு சமைத்து சாப்பிட்டனர்.

திருக்கை மீன் ஏற்றிச்செல்லப்பட்ட காட்சி நிஞ்சா ஆமைபோல் வேடிக்கையாக இருந்தாலும், மீன்பிடிப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று வனஉயிர் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில், சிங்கப்பூரில் சில வகையான திருக்கை மீன்கள் அழியக்கூடிய இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தில் உள்ள திருக்கை மீன் பெரும்பாலும் ‘புராட் காவ்டேல்’ அல்லது ‘காவ்டேல்’ வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று மரீன் ஸ்டுவர்ட்ஸ் லாப நோக்கற்ற அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

‘புராட் காவ்டேல்’ திருக்கை மீன் அழியக்கூடிய அபாயநிலையில் இருப்பதாகவும், ‘காவ்டேல்’ திருக்கை மீன் அழிவை நெருங்கிவிட்டதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்