நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பு மருந்து சிங்கப்பூரில் குறிப்பிட்ட சில பொது மருந்தகங்களில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து மே 31ஆம் தேதி வரை கிடைக்கும். தேசியத் தடுப்பூசித் திட்டத்தின்கீழ், தகுதிபெறுவோர் அதனைப் போட்டுக்கொள்ளலாம்.
சிங்கப்பூரில் 12 வயதை எட்டியோர், ஜேஎன்.1 நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அது சாத்தியமாகியுள்ளது.
தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) அந்தத் தகவலை வெளியிட்டது.
அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு வந்த எல்பி.8.1 எம்ஆர்என்ஏ தடுப்பூசிக்கு மாற்றாக, ஜேஎன்.1 நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசி இருக்கும் என்று அமைப்பு தெரிவித்தது.
இரண்டு தடுப்பூசிகளுமே கடும் நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைப்பு கூறியது.
எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள இயலாதவர்களுக்குப் புரதச்சத்தை அடிப்படையாகக் கொண்ட நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பிறகு இதயப் பிரச்சினைகள் வந்தோருக்கு அது பொருந்தாது.
தற்போதைய ஜேஎன்.1 நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசிகள், அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி காலாவதியான பிறகு, தேசியத் தடுப்பூசித் திட்டத்தின்கீழ் கிடைக்கமாட்டா. எனவே, விருப்பமுள்ளோர் அந்தத் தேதிக்குள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இருப்பினும் எல்பி.8.1 எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறப்பட்டது.

