தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடரும் துன்புறுத்தல்: பொங்கோலில் பலத்த காயமடைந்த பூனை மரணம்

2 mins read
b5d01448-4aab-4e1d-a435-833d34455510
பூனை மீதான காயங்கள் வேண்டுமென்றே துன்புறுத்தப்பட்டதை உணர்த்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்:  ‘லூனி சிங்கப்பூர்’ /ஃபேஸ்புக்

பொங்கோல் வட்டாரத்தில் பூனை ஒன்று துன்புறுத்திக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தை தேசிய பூங்காக் கழகம் விசாரித்து வருகிறது.

ஏற்கெனவே கடந்த வாரம் அதுபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்து இருந்தது. அந்த சோகம் நீடிக்கும் நிலையில் மற்றொரு செல்லப் பிராணி துன்புறுத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொங்கோலில் உள்ள சுமாங் வாக் புளோக் 326பி அருகே உள்ள கார்ப் பேட்டையில் காயமடைந்த பூனை ஒன்று கிடப்பதாக தனக்குத் தகவல் கிடைத்ததைக் கழகம் செவ்வாய்க்கிழமை (மே 13) உறுதி செய்தது.

அது பற்றி விசாரித்து வருவதாகவும் அது கூறியது.

முன்னதாக, அன்றைய தினம் ‘லூனி சிங்கப்பூர்’ எனப்படும் விலங்குநல அமைப்பு தனது ஃபேஸ்புக் பதிவில் அந்தச் சம்பவம் பற்றி குறிப்பிட்டு இருந்தது.

“சுமாங் வாக் புளோக் 326பி அருகே கடுமையான காயங்களுடன் மே 11 அல்லது மே 12ஆம் தேதி பூனை ஒன்று காணப்பட்டதை அறிந்து வேதனை அடைகிறோம்,” என்று அந்த அமைப்பு தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளது.

உடனடியாக அந்தப் பூனைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அது உயிர்பிழைக்கவில்லை.

“வேண்டுமென்றே அந்தப் பூனை துன்புறுத்தப்பட்டதையே காயங்கள் உணர்த்தின. அதன் கழுத்து நெரிக்கப்பட்டதுபோலவும் தெரிகிறது,” என்றும் ‘லூனி சிங்கப்பூர்’ குறிப்பிட்டு உள்ளது.

துன்புறுத்தல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் உதவியை அது நாடுகிறது. மேலும், கார்ப்பேட்டையில் இருந்த கார்களின் கேமரா அல்லது சிசிடிவி படக்கருவி ஆகியவற்றில் பதிவான காட்சிகளையும் அது சேகரிக்க முயன்று வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (மே 9) காலை ஈசூன் வட்டாரத்தில் பூனை ஒன்று கண்கள் தோண்டப்பட்டு கடுமையான காயங்களுடன் காணப்பட்டது. பின்னர் அது இறந்துபோனது.

குறிப்புச் சொற்கள்