வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) அரசியல் சார்ந்த முக்கிய அமைப்பாக வகைப்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்த அறிவிப்புக் கடிதம் வியாழக்கிழமையன்று (ஜூலை 11) என்டியுசிக்கு வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சு ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.
‘ஃபிக்கா’ எனப்படும் வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டமானது, உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டுக் குறுக்கீட்டை எதிர்கொள்ளும் அதிகாரத்தை அமைப்புகளுக்கு வழங்குகிறது.
“என்டியுசிக்கும் மக்கள் செயல் கட்சிக்கும் இடையே அணுக்க, இணக்க உறவுள்ள நிலையில், பொதுநலன் கருதி என்டியுசியை ‘ஃபிக்கா’ சட்டத்தின்கீழ் அரசியல் சார்ந்த முக்கிய அமைப்பாக பதிவாளர் மதிப்பிட்டிருக்கிறார்,” என்று உள்துறை அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகள், என்டியுசியானது வெளிநாட்டுத் தலையீட்டின் இலக்காக அமையக்கூடிய ஆபத்தைக் குறைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், அரசியல் சார்ந்த உயர்பதவிகளில் இருப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தேர்தல் முகவர்கள் உள்ளிட்டோர் அரசியல் சார்ந்த முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்.
தங்களது நடவடிக்கைகள் அரசியல் சார்ந்து அமைந்திருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டால், அத்தகையோரும் அல்லது குழுக்களும் அரசியல் சார்ந்த முக்கியவத்துவம் உள்ளவர்களாகக் கருதப்படுவர்.
அரசியல் சார்ந்த முக்கிய அமைப்பாக வகைப்படுத்தப்பட்டால், $10,000 அல்லது அதற்குமேல் பெறும் அரசியல் நன்கொடைகள் குறித்தும் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்தும் என்டியுசி ஆண்டுதோறும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
தனது பிரதிநிதித்துவங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க என்டியுசிக்கு 14 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சார்ந்த முக்கிய அமைப்பாக என்டியுசி வகைப்படுத்தப்பட்டால், அதனை எதிர்த்து உள்துறை அமைச்சிடம் அது மேல்முறையீடு செய்யலாம்.
இதனிடையே, அரசியல் சார்ந்த முக்கிய அமைப்பாக என்டியுசி வகைப்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இப்போதைய செயல்பாடுகளுக்கு எந்தத் தடையும் நேராது என்று மனிதவள அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
“முக்கிய முத்தரப்புப் பங்காளியாக என்டியுசியுடன் இணைந்து மனிதவள அமைச்சு தொடர்ந்து பணியாற்றும். தொழிற்சங்கச் சட்டத்திற்கு இணங்கும் வகையிலேயே அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன,” என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
ஏறத்தாழ 1.3 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ள என்டியுசி, 58 தொழிற்சங்கங்கள், ஏழு வர்த்தகச் சங்கங்கள், ஏழு சமூக நிறுவனங்கள், மற்ற பங்காளிகள் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கிறது.
தன் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் நலன்பேண என்டியுசி கடப்பாடு கொண்டுள்ளது என்று அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2023 டிசம்பரில் மனித உரிமைக் குழுவான மருவா, அரசு சார்பற்ற நிறுவனமான திங்க் சென்டர் என்ற இரு அமைப்புகளும் ‘ஃபிக்கா’ சட்டத்தின்கீழ் அரசியல் சார்ந்த முக்கிய அமைப்புகளாக வகைப்படுத்தப்பட்டன. அதுபோல், 2024 பிப்ரவரியில் சிங்கப்பூர் செல்வந்தர் ஃபிலிப் சான் மன் பிங்கும் அரசியல் சார்ந்த முக்கிய நபராக அறிவிக்கப்பட்டார்.

