மூத்த ஊழியர்களுக்கான ஆதரவை மேம்படுத்த என்டியுசி அழைப்பு

2 mins read
56c6149d-a13b-4934-9c7c-2d24bfb9b87c
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) துணைப் பொதுச் செயலாளர் டெஸ்மண்ட் டான், டான் டோக் செங் மருத்துவமனையில் உள்ள மூத்த ஊழியரைச் சந்தித்து கைகுலுக்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்த ஊழியர்களுக்கான ஆதரவை அரசாங்கமும் முதலாளிகளும் மேம்படுத்த வேண்டும் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின்(என்டியுசி) துணைப் பொதுச் செயலாளர் டெஸ்மண்ட் டான் வலியுறுத்தியுள்ளார்.

வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் எதிர்வரும் நிதி ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவுள்ளார். அதைக் குறிப்பிட்டு திரு டான் தமது கருத்தை முன்வைத்துள்ளார்.

மூத்த ஊழியர்களைச் சந்திக்க டான் டோக் செங் மருத்துவமனைக்குப் புதன்கிழமை (ஜனவரி 28) சென்றிருந்தபோது திரு டான் இவ்வாறு கூறினார்.

வயதான மூத்த ஊழியர்களுக்கு வேலை மறுவடிவமைப்பு, திறன்களை மேம்படுத்துதல், மூத்தோரை உள்ளடக்கிய நடைமுறைகள் ஆகியவற்றை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

“சிங்கப்பூரின் ஊழியரணி மூப்படைந்து வருகிறது, அதேபோல் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வேலைகளின் தேவையை மாற்றியமைத்து வருகிறது. அதனால் முதலாளிகள், தொழிற்சங்கங்கள், அரசாங்கம் ஆகியவை மூத்த ஊழியர்களுக்குச் சரியான தளத்தை அமைத்து அவர்களைச் சிறப்பாகச் செயல்படவைத்துத் தொடர்ந்து பணியில் ஈடுபட வைக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் ஆய்வு நடத்தியது. அதில் 70 வயதைத் தாண்டியும் வேலை செய்ய மூத்த ஊழியர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரியவந்தது.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் விழிப்புடன் இருக்கப் பணி முக்கியமானது என்று மூத்தோர் குறிப்பிட்டனர். வேலையிடத்தில் நீக்குப்போக்கான சூழலையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 591 பேர் கலந்துகொண்டனர். ஆய்வில் அனைத்து வயதுப் பிரிவினரும் இருந்தனர்.

பிரதமர் அலுவலகத்தில் மூத்த துணையமைச்சராகவும் உள்ள திரு டான், முதலாளிகள் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசுடன் இணைந்து நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன் மூலம் மூத்த ஊழியர்களுக்கான வேலை மறுவடிவமைப்பை மேற்கொள்ளமுடியும் என்று அவர் சொன்னார்.

நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் மானியங்களையும் வழங்குகிறது.

மூத்த ஊழியர்களைப் பணியில் அமர்த்தவும், பயிற்சி வழங்கவும் அவர்களை வேலையில் தக்க வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் திரு டான் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்