உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, விநியோகத் தடங்கல்களால் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க, சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் ஃபேர்பிரைஸ் குழுமம் 300க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்காது என்று அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை (ஏப்ரல் 23) முதல் நடப்புக்கு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், நெஸ்லே பொருள்கள், காபி, காங் காங் நூடுல்ஸ், கோல்கேட் பற்பசை, லீ கும் கீ சாஸ்கள் உள்ளிட்ட பல முக்கியப் பொருள்களின் விலைகள் மே 31 வரை உயர்த்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஏப்ரல் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 100 அத்தியாவசியப் பொருள்களுக்கான விலைக் கட்டுப்பாட்டுடன் தற்போது இந்தக் கூடுதல் பொருள்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள பொருளியல் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, நெஸ்லே, நியூ மூன் உட்பட 30க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களுடன் இணைந்து ஃபேர்பிரைஸ் இம்முடிவை எடுத்துள்ளது.
மேலும், சாஸ் (CHAS) நீலம், ஆரஞ்சு அட்டைதாரர்களுக்கான தள்ளுபடி 3 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், இணையம் வழி தருவிப்பு ஆணைக்கான $3.99 சேவைக் கட்டணமும் அவர்களுக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் ஃபேர்பிரைஸ் செயலி மூலம் இந்தச் சலுகைகளை எளிதாகப் பெறலாம்.
அங்காடிகளில் அத்தியாவசிப் பொருள்களின் விலையேற்றத்தை தடுத்து வைக்கும் திட்டத்தை செயல்படுத்த குழுமம் 30க்கும் மேற்பட்ட உணவு, காய்கறி விநியோகஸ்தர்களுடன் ஒருங்கிணைந்துள்ளது.
மேல் விவரங்களுக்கு https://www.fairprice.com.sg/events/in-store/fairprice-price-freeze என்ற இணையப் பக்கத்தைக் காணலாம்.

