தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால் இணையவழி ஊழியர் சங்கங்கள் நிறுவப்படும்

2 mins read
3de88161-b231-4d56-accc-146979b2e78a
இணையவழி ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (இடமிருந்து ஏழாவது), உதவித் தலைமைச் செயலாளர் யோ வான் லிங் (இடமிருந்து நான்காவது), தன்னுரிமைத் தொழிலாளர்கள், சுயத் தொழில் புரிவோர் தொழிற்சங்கத்தின் இயக்குநர் ஜீன் சீ (வலமிருந்து இரண்டாவது). - படம்: தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் இணையவழி ஊழியர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால், புதிய இணையவழி ஊழியர் சங்கங்கள் நிறுவப்படும்.

இணையவழி ஊழியர்களுக்காக தொழிற்சங்கம் போன்ற தளத்தை அமைப்பதே நோக்கம்.

தற்போது, தனியார் வாகன ஓட்டுநர்கள், விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட அத்தகைய ஊழியர்களை மூன்று தொழில்துறை அமைப்புகள் பிரதிநிதிக்கின்றன.

தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம், தேசிய விநியோக ஆர்வலர்கள் சங்கம், தேசிய டாக்சி சங்கம் ஆகியவையே அவை.

இருப்பினும், கூட்டு உடன்படிக்கைகளைச் செய்வதற்கும் அதிகாரபூர்வமாகப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் இந்த அமைப்புகளுக்குத் தற்போதைக்குச் சட்ட அதிகாரங்கள் இல்லை என தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) கூறியது.

தற்போது, வேலை தொடர்பான பிரச்சினைகள் நல்லெண்ண அடிப்படையில் கையாளப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டதும் என்டியுசி, இணையவழி ஊழியர் சங்கங்களை மனிதவள அமைச்சின்கீழ் அதிகாரபூர்மாகப் பதிவுசெய்யும்.

அதனைத் தொடர்ந்து, தற்போதைய உறுப்பினர்கள் புதிய அமைப்புகளுக்கு மாற்றிவிடப்படுவர்.

இதனை விரைவில் செய்துவிட என்டியுசி விரும்புவதாக அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் வியாழக்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அந்தச் சங்கங்கள் எவ்வாறு நிறுவப்பட்டு அமைக்கப்படும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், என்டியுசி எப்போதுமே புத்தாக்கத்தைக் கடைப்பிடிப்பதாகத் திரு இங் சொன்னார்.

“இன்று நாம் உங்களிடம் சொல்லும் திட்டங்கள், மூன்று அல்லது ஆறு மாதங்களில் மேம்படுத்தப்படலாம்,” என்றார் அவர்.

“நாம் தொடர்ந்து மாற்றங்களை எதிர்நோக்கும் சந்தையில் செயல்படுகிறோம்,” என்று திரு இங் கூறினார்.

இணையவழி ஊழியர்களுக்கான தொழிலாளர் பாதுகாப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வரும். இந்தப் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய மசோதா ஆகஸ்ட் மாத நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.

மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால், தொழிற்சங்கங்களுக்கு உள்ள அதிகாரங்களைப் போன்ற செயல்முறைகளைக் கொண்ட அமைப்புகளால் இணையவழி ஊழியர்கள் பிரதிநிதிக்கப்படுவதை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்