செயற்கை நுண்ணறிவுடன் கூடிய சிந்தனைப் பயிலகம் அறிமுகம்

3 mins read
8d0c40e2-309a-4b7a-aa51-ddf88e82d476
புதிய என்டியுசி சிந்தனைப் பயிலகம் நடத்தும் ‘நுண்சிந்தனை’ பாடத்தில், செயற்கை நுண்ணறிவுச் செயலிவழி ஆலோசனை பெறும் ‘யுஓபி’ வங்கியின் தரவு வல்லுநர் கேரி லீ, 34. அவருடன் என்டியுசி பொதுச் செயலாளர் இங் சீ மெங். - படம்: சாவ்பாவ்

எதிர்காலத்தில் வேலையிடத்தில் தேவைப்படும் சிந்தனையாற்றலை வளர்க்க, ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய பயிலகத்தை என்டியுசி கற்றல் நடுவம் (learning hub) அறிமுகப்படுத்தியுள்ளது.

‘என்டியுசி கற்றல் நடுவ சிந்தனைப் பயிலகம்’ (Thinking Academy) எனும் அந்நிலையம், பட்டத்தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் (PMEs) ஆகியோரைக் குறிவைக்கிறது.

என்டியுசி கற்றல் நடுவம் ஏற்கெனவே வழங்கிவரும் மூன்று பாடப்பிரிவுகளில் ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவு சேர்க்கப்பட்டு, பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

என்டியுசி கற்றல் நடுவத்தோடு இணைந்து, வடிவமைப்பியல் சார்ந்த பாடத்துக்கு மெர்டோக் பல்கலைக்கழகமும் நுண்சிந்தனை சார்ந்த பாடத்துக்கு ஏஐ சிங்கப்பூரும் தேர்ச்சிச் சான்றிதழ்களை வழங்கும்.

பாடங்களை முடித்ததும், தேர்ச்சிச் சான்றிதழை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு வழங்கும்.

ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் எத்தகைய கேள்விகளை எழுப்பலாம், எவ்வாறு செயற்கை நுண்ணறிவுமூலம் தொழில் சார்ந்த முடிவுகளை எடுப்பது போன்றவற்றை இப்பாடங்கள் கற்பிக்கும்.

மேல்விவரங்களுக்கு https://www.ntuclearninghub.com/thinking-academy இணையத்தளத்தை நாடலாம்.

செயற்கை நுண்ணறிவு உலகிற்குத் தேவைப்படும் சிந்தனையாற்றலை வளர்க்கும் புதிய பயிலகம் மார்ச் 6ஆம் தேதி அறிமுகம் கண்டது.
செயற்கை நுண்ணறிவு உலகிற்குத் தேவைப்படும் சிந்தனையாற்றலை வளர்க்கும் புதிய பயிலகம் மார்ச் 6ஆம் தேதி அறிமுகம் கண்டது. - படம்: சாவ்பாவ்

போட்டித்தன்மையை அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவுமூலம் சொத்துச்சந்தை முதல் வங்கிவரை பல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருவதை, புதன்கிழமை (மார்ச் 6) இடம்பெற்ற பயிலகத்தின் தொடக்கவிழாவில் பேச்சாளர்கள் சுட்டினர்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் உதவியோடு டிபிஎஸ் வங்கி 4,000 வேலைகளைக் குறைக்கவுள்ளதைச் சுட்டிக்காட்டிய என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், தொழில்நுட்பம் எத்தகைய தொழிலையும் மாற்றியமைக்கும் என எச்சரித்தார்.

எனினும், ‘டிபிஎஸ்’ வங்கி 13,000 ஊழியர்களைத் திறன் மேம்பாட்டுக்கு அடையாளம் கண்டுள்ளதையும் அவர் பாராட்டினார்.

“இன்று உலக நாடுகள் 19ஆம், 20ஆம் நூற்றாண்டில் இருந்ததுபோல, தம் சொந்த நாட்டு நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன. பெரிய அளவிலான வணிகப் போர் நடைபெற்றுவருவதால் வணிகச் செலவுகள் அதிகரிக்கின்றன,” என கூறிய திரு இங், இத்தகைய சூழலில் சிங்கப்பூர் வெற்றிபெற, ஊழியர்களின் திறன்மேம்பாடு முக்கியம் என வலியுறுத்தினார்.

புதிய முயற்சியில் நிறுவனங்கள் உடன்பாடு

தொடக்கவிழாவில், என்டியுசி கற்றல் மையத்தோடு ஏஐ சிங்கப்பூர், மெர்டோக் பல்கலைக்கழகம் இரண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

மண்டாய் வனவிலங்குக் குழுமமும், ‘என்டியுசி யு எஸ்எம்இ’ கூட்டணியைச் சார்ந்த சிறு, நடுத்தர நிறுவனங்களும் புதிய சிந்தனைப் பயிலகத்திற்கான ஆதரவுக் குறிப்பில் கையெழுத்திட்டன.

“நாங்கள் கூடிய விரைவில் இப்பாடங்களுக்கு எங்கள் ஊழியர்களில் சிலரை அனுப்பவுள்ளோம். எத்தகைய வாடிக்கையாளர்கள் எந்தெந்த நேரத்தில் வருகின்றனர் போன்ற தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்க செயற்கை நுண்ணறிவு உதவும்,” என்றார் எஸ்ஜி கேல்வனைசிங் (SG Galvanizing) நிறுவனத்தின் பொது மேலாளர் கிரிஸ் போக்.

ஆர்வமூட்டும் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு

தொடக்கவிழாவோடு ஒட்டி, செயற்கை நுண்ணறிவு உட்புகுத்தப்பட்ட ‘நுண்சிந்தனை’ பாடமும் அதே நாளில் நடத்தப்பட்டது. அதில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடக்கவிழாவோடு ஒட்டி, செயற்கை நுண்ணறிவு உட்புகுத்தப்பட்ட ‘நுண்சிந்தனை’ பாடமும் நடத்தப்பட்டது.
தொடக்கவிழாவோடு ஒட்டி, செயற்கை நுண்ணறிவு உட்புகுத்தப்பட்ட ‘நுண்சிந்தனை’ பாடமும் நடத்தப்பட்டது. - படம்: சாவ்பாவ்

பொதுவாகக் கிடைக்கும் செயற்கை நுண்ணறிவு உத்திகளோடு, என்டியுசி கற்றல் மையத்துக்கென தனிப்பயனாக்கப்பட்ட ‘எம்பதி’ (Empathy) செயலியையும் மாணவர்கள் பயன்படுத்தி, வெவ்வேறு சவால்களுக்குத் தீர்வுகண்டனர்.

“எம்பதி செயலியோடு உரையாடும்போது ஒரு மனிதருடன் உரையாடுவதுபோல் இருந்தது,” என்றார் ‘யுஓபி’ வங்கியின் தரவு வல்லுநர் கேரி லீ, 34.

“எம்பதி ஒரு கையடக்க விரிவுரையாளர் போன்றது. அது சொல்லிக் கொடுக்கும்போது ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதனிடம் உடனே கேட்கலாம்,” என்றார் பயிற்றுவிப்பாளர் ஜோனி யோ, 61.

மாணவர்களால் ‘எம்பதி’ செயலியை ஒரு மாதத்துக்குப் பயன்படுத்த முடியும். தற்போது என்டியுசி கற்றல் மையம் வழங்கும் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும், மனிதவளப் (HR) பாடங்களிலும் அச்செயலி பயன்படுத்தப்படுகிறது.

‘எம்பதி’ செயலி ஆலோசகராகவும் விரிவுரையாளராகவும் செயல்படுகிறது.
‘எம்பதி’ செயலி ஆலோசகராகவும் விரிவுரையாளராகவும் செயல்படுகிறது. - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்