மாணவர்களுக்கு மேம்பட்ட வர்த்தகக் கல்வியை வழங்கும் நோக்கத்துடன், அனைத்துலகத் தலைவர்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு).
அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய வேலைகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், ஆகஸ்ட் 2025 முதல் என்டியுவின் நன்யாங் வர்த்தகப் பள்ளியில் வர்த்தகம், கணக்கியல் தொடர்பான பட்டங்களைப் பயிலவிருக்கும் புதிய மாணர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் தலைவர்களை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட என்டியுவின் ஆறு கல்விமான்கள் திட்டங்களில் நன்யாங் வர்த்தகப் பள்ளி அனைத்துலகத் தலைவர்கள் திட்டமும் ஒன்று.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, உலகின் முதன்மை வர்த்தகப் பள்ளிகளில் ஒன்றான கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லியின் ஹாஸ் வர்த்தகப் பள்ளியில் மாணவர்கள் ஒரு பள்ளிப் பருவத்திற்கு கல்விப் பரிமாற்றத் திட்டத்தில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்படும்.
மாணவர்களின் கலாசார நுண்ணறிவை வளர்க்கவும் அனைத்துலகத் தொடர்புகளை ஏற்படுத்தவும் உலகளாவிய கண்ணோட்டங்களை வளர்க்கவும் இந்த அனுபவம் வழிவகுக்கும்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள், $10,000 வரை நிதியுதவியுடன் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் குழுத் திட்டப்பணிகளைத் தொடங்கும் வாய்ப்பை தங்களின் இறுதி ஆண்டில் பெறுவார்கள்.
சமூக நிறுவனங்களைத் தொடங்குவது முதல் சமூக சவால்களுக்குப் புதுமையான தீர்வுகளை உருவாக்குவது வரை இத்திட்டப்பணிகளில் அடங்கலாம்.
ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற முக்கிய அனைத்துலகச் சந்தைகளில் பயிற்சித்திட்ட வாய்ப்புகளுடன் தொழில்துறை தொடர்பான முன் அனுபவங்கள், வழிகாட்டுதல் ஆகியவையும் இத்திட்டத்தின் மற்ற முக்கிய அம்சங்களாகும்.
தொடர்புடைய செய்திகள்
தலைமை நிர்வாகிகள் வழிநடத்தும் ஆறு மாத வழிகாட்டல் திட்டம், தொழில்துறைப் பயிலரங்குகள், தகவல் தொடர்புத்திறனையும் மேடைப் பேச்சுத்திறனையும் மேம்படுத்த பயிற்சி போன்ற அம்சங்களையும் மாணவர்கள் எதிர்பார்க்கலாம்.
இணைப்பாட நடவடிக்கைகளில் சாதனைகளையும் வலுவான தலைமைத்துவத் திறன்களையும் தொடர்புத்திறன்களையும் கொண்ட மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பின்வரும் நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மட்டுமே இதற்குத் தகுதிபெறுவர்: கணக்கியலிலும் வணிகத்திலும் இரட்டைப் பட்டம், கணக்கியலிலும் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவிலும் இரட்டைப் பட்டம், நிதித்துறையில் பயன்முறை கணினியியல் இளநிலைப் பட்டம், கணக்கியல் (நிலைத்தன்மை மேலாண்மை, பகுப்பாய்வு) இளநிலைப் பட்டம்.

