சிங்கப்பூரின் எரிசக்தி மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள அரசாங்க ஊழியர்கள், 2027ஆம் ஆண்டு முதல் உலகின் முன்னணி அணுசக்தி அமைப்புகளில் நேரடியாகப் பணியாற்றி அனுபவம் பெறும் வாய்ப்பைப் பெறுவர்.
சிங்கப்பூரில் வலுவான அணுவாற்றல் மனிதவளக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள நான்கு முக்கிய முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
ஐந்து நாள்கள் நடைபெறும் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 26) இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அரசாங்கம் தனியார் துறைக்காகவும் அனைத்துலக எரிசக்தித் தலைவர்களுக்காகவும் மேலும் இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. நான்காவது முயற்சியாக, சிங்கப்பூரின் முதல் அணுசக்திப் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பும் தொடங்கப்படவுள்ளது.
ஐநா சபையின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு மூலம் 2027ஆம் ஆண்டில் மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சிங்கப்பூர் கடந்த மே மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் அணுவாற்றல் பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவது குறித்த தெளிவான முடிவு எடுப்பதற்கு இந்நாட்டின் ஆயத்தநிலையை நிர்ணயிக்க இந்த மறுஆய்வு உதவும்.
மாநாட்டின் தொடக்க விழாவில் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் டான் சீ லெங் உரையாற்றினார்.
“மறுஆய்வுக் குழுவின் வருகைக்கு நாங்கள் தயாராகி வரும் அதே வேளையில், சிங்கப்பூருக்குள் அணுசக்தி நிபுணர்கள், தொழிற்துறையாளர்களின் வளப்பிரிவை உருவாக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்குகிறோம்,” என்று அமைச்சர் டான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அரசாங்கம் இந்தத் தெரிவை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது.
தென்கிழக்காசியாவிலும் உலக அளவிலும் அணுசக்தி மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் இறுதியில் அணுசக்தியைப் பயன்படுத்த வேண்டாம் என்று தீர்மானித்தாலும்கூட, தற்போது உருவாக்கப்பட்டு வரும் மனிதவளத் திறன்களும் நிபுணத்துவமும் தொடர்ந்து நாட்டிற்குப் பயனளிக்கும் என்று அமைச்சர் டான் மேலும் தெரிவித்தார்.
