சிங்கப்பூரில் அணுசக்தி உலைகளை (Nuclear reactor) எப்படி பாதுகாப்பாக வடிவமைத்துச் செயல்படுத்துவது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய ஆய்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
அணுசக்தி ஆலைகள் இடம்பெறும் வட்டாரத்துக்கு ஏற்றவாறு நாட்டைத் தயார்ப்படுத்த சிங்கப்பூரின் அணுசக்திப் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு அந்த ஆய்வுகளை நடத்த ஏற்பாடு செய்கிறது.
அணுசக்தி உலைகளைப் பாதுகாப்பாக வடிவமைத்துச் செயல்படுத்துவதற்கான ஆய்வு, தேசிய சுற்றுப்புற வாரியம் ஒப்பந்தப்புள்ளிகளுக்குக் கோரும் மூன்று அணுசக்தி தொடர்பான ஆய்வுகளில் ஒன்றாகும். அணுசக்தி தொடர்பில் அனைத்துலக அமைப்புகளும் தேசிய அமைப்புகளும் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு தரநிலைகளை ஆய்வு ஆராயும்.
அணு உலைகளை எப்படி பாதுகாப்பான முறையில் வடிவமைத்துச் செயல்படுத்துவது, எத்தகைய பாதுகாப்பு முறைகள் தேவைப்படும், விபத்துகளை எப்படித் தடுப்பது ஆகியவற்றை இந்த ஆய்வு ஆராயும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் வியாழக்கிழமை (மார்ச் 26) அறிக்கை மூலம் குறிப்பிட்டது.
அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து சிங்கப்பூர் இதுவரை முடிவெடுக்கவில்லை. அதேவேளை, அணுசக்தியின் பல்வேறு அம்சங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு அதைப் பயன்படுத்தும் சாத்தியம் குறித்து நாடு ஆராய்ந்து வருகிறது.
பாரம்பரிய அணுசக்தி ஆலைகள் இங்கு அமைக்கப்படுவதை சிங்கப்பூர் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. எனினும், எஸ்எம்ஆர் என்றழைக்கப்படும் சிறு அணு உலைகள் போன்ற அதிநவீன தொழில்நுட்ப முறைகளில் காணப்படும் மேம்பாடுகளை சிங்கப்பூர் கண்காணித்து வருகிறது.
இரண்டாவது ஆய்வு, அணுசக்தி ஆலைகளை அமைக்க அனைத்துலக அளவிலான தரநிலைகள், விதிமுறைக் கட்டமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
மூன்றாவது ஆய்வு, சிங்கப்பூரிலும் வட்டார அளவிலும் அணுசக்திப் பயன்பாடு தொடர்பான சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட அம்சங்களை ஆராயும். இதன் தொடர்பில் எவ்வாறு பொதுச் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது என்பதில் கவனம் செலுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஒட்டுமொத்தத்தில், அணுசக்தித் துறையில் உள்ளூர்த் திறனாளர்களை வளர்க்கும் முயற்சிகளுடன் இந்த ஆய்வுகள், பாதுகாப்பான முறையில் இங்கு அணுமின் ஆற்றலைச் செயல்படுத்துவதற்கான சாத்தியத்தைத் தனிப்பட்ட முறையில் ஆராயத் தேவையான தகவல்களையும் தொழில்நுட்ப ஆற்றலையும் சிங்கப்பூர் கொண்டிருப்பதை உறுதிசெய்யும்.

