சிங்கப்பூரில் உள்ள ஆண்களின் நிர்வாணப் படங்களும் காணொளிகளும் ‘டெலிகிராம்’ குழு ஒன்றில் விற்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெண்களைப்போல் நடித்த மோசடிக்காரர்கள் அந்த ஆண்களிடம் நயமாகப் பேசி இத்தகைய படங்களை அனுப்ப இணங்க வைத்ததாகத் தெரிகிறது.
அந்த ‘டெலிகிராம்’ குழுவில் சேர்வதற்கு ஒருமுறை மட்டும் செலுத்தும் கட்டணமாக 600 வெள்ளி வசூலிக்கப்பட்டது. இவ்வாறு பணம் செலுத்திய அதன் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான படங்களையும் காணொளிக் காட்சிகளையும் காண முடிந்ததாகக் கூறப்பட்டது.
மின்னிலக்க நாணயம், மின்னிலக்கப் பணப்பை போன்றவை மூலம் பணம் செலுத்தி உறுப்பினராக அக்குழுவில் இணைய முடியும்.
அந்தக் குழுவில் கிட்டத்தட்ட 180 பேர் உறுப்பினர்கள் என்று கூறப்பட்டதாகத் தெரிவித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அந்தத் தகவலை உறுதிப்படுத்த இயலவில்லை என்று கூறியது.
வாடிக்கையாளர் என்ற போர்வையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் ஒருவர் அந்தக் குழு நிர்வாகியைத் தொடர்புகொண்டார். இணையத்தில் பெண்களிடம் பேசுவதாகக் கருதியே சம்பந்தப்பட்ட ஆண்கள் அப்படங்களை அனுப்பியதாக அந்த நிர்வாகி கூறினார். ஆசை வார்த்தைகள் மூலம் தூண்டில் வீசி, அத்தகைய படங்களை அவர்களை அனுப்ப வைத்ததாக அவர் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டது.
அந்த டெலிகிராம் குழுவின் நிர்வாகிகள் அந்தப் படங்கள் குறித்துத் தற்போது எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்வதாகத் தெரியவந்துள்ளது.


