கொவிட் 19 பெருந்தொற்று சுகாதாரப் பேரிடராக உருவெடுத்த வேளையில் இன்முகத்துடனும் நம்பிக்கையுடனும் நோயாளிகளுக்குச் சேவையாற்றிய தாதி அமல்ராஜ் மெட்டில்டா ராணி, 59, இந்த ஆண்டிற்கான ‘தகுதிசார் தாதியர்’ விருதைப் பெற்றுள்ளார்.
இவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் தாதியர் கல்வியாளர்.
35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். துறை சார்ந்த இளையர்களைத் திறனாளர்களாக வடிவமைத்திடத் துடிப்புடன் செயலாற்றி வருபவர்.
உன்னத அர்ப்பணிப்பு, அறிவாற்றலுடன் திறன்களையும் வெளிக்காட்டி தாதிமைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக ‘தகுதிசார் தாதியர் விருது’ பெற்ற 141 தாதியர்களுள் திருவாட்டி மெட்டில்டாவும் ஒருவர்.
தாதியர்களுக்கான இவ்விருதினை சுகாதார அமைச்சரும், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், மூப்படைதல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஓங் யி காங் திங்கட்கிழமை (ஜுலை 7) வழங்கினார்.
கொவிட்-19 நோய்ப் பரவல் காலத்தில் அச்சம், நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றிற்கு மத்தியிலும் மனந்தளராமல், ஆதரவு தரும் வகையில் பணியாற்றிவர் தாதி மெட்டில்டா.
தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளைப் பராமரிக்கும் அதேவேளையில், தனிநபர் சுகாதாரப் பாதுகாப்புக் கருவிகளை அணிந்துகொள்ளுதல், நோயாளிகளுக்கு மருந்துகளை அளித்தல் எனப் பல வேலைகளையும் கவனமுடன் செய்தது குறித்து நினைவுகூர்ந்தார் அவர்.
‘‘அது சவாலான காலகட்டமாக இருந்தாலும், தாதிகள் நாங்கள் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதிலும், குழுவாக ஒருவருக்கொருவர் உதவி செய்வதிலும் கவனம் செலுத்தினோம்,’’ என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இத்துறைக்கு வரும் இளம் தாதியர்கள் தங்கள் பணிகளில் சிறந்து விளங்கத் தேவையான வழிகாட்டுதல்களையும் நல்குகிறார் இந்தச் சாதனைத் தாதி.
“மூத்த தாதி ஒருவர் அருகிலிருந்து வழிகாட்டும்போது அவர்கள் கூடுதல் ஆதரவைப் பெறுவர். இது பதற்றத்தைக் குறைத்து அவர்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்,” என்று குறிப்பிட்ட திருவாட்டி மெட்டில்டா, தாதியாகவும் தாதியர் கல்வியாளராகவும் விளங்குவது தமக்கு ஆனந்தம் என்றும் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது என்றும் தெரிவித்தார். விருது பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், “இவ்விருதைப் பெறுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமன்று. பராமரிப்பு, கற்பித்தல் ஆகியவற்றுடன் சேவை செய்ய முழு மனத்துடன் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒவ்வொரு தாதிக்கும் உரியது,” என்றார்.
இதற்கிடையே, விருது விழாவில் உரையாற்றிய திரு ஓங், “எஸ்ஜி 60, சிங்கப்பூரில் 140 ஆண்டுகாலத் தாதிமையின் உன்னதத்தைக் கொண்டாடும் வேளையில், சுகாதாரப் பராமரிப்புச் சேவைக்கும் நாட்டைக் கட்டியெழுப்பியதிலும் தாதியர் நல்கிய பேரளவிலான பங்களிப்புக்கு நன்றி,” என்று கூறினார்.
மேலும், ‘‘மக்களுக்குத் தகுதிவாய்ந்த பராமரிப்பை அளித்திட விழையும் பொதுவான இலக்குடன் சுகாதார ஊழியரணியை உருமாற்றம் செய்வதற்கான முன்னேற்றப் பணிகளில் நாம் ஒருங்கிணைந்து, துடிப்புடன் செயலாற்ற இயலும். அதில் வெற்றி அடைவோம்,’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.