அரசு நிதியுதவித் திட்டத்தின்கீழ் உதவிபெறும் குடும்பங்கள் குறைவு

3 mins read
876b73d6-9c76-4b99-aa3d-b386ef8c6ee2
2024ல் மொத்தம் 20,825 குடும்பங்கள் காம்கேர் குறுகியகால - நடுத்தரகால உதவித் திட்டத்தின்கீழ் உதவி பெற்றன. - படம்: பெரித்தா ஹரியான்

கொவிட்-19க்கு பிந்தைய ஆண்டுகளில் சிங்கப்பூரின் பொருளியல் மேம்பட்டு, வேலைச்சந்தை வலுவடைந்த நிலையில், ‘காம்கேர்’ அரசாங்க நிதியுதவித் திட்டத்தின்கீழ் உதவிபெறும் குறைந்த வருமானக் குடும்பங்களின் எண்ணிக்கை 2024ல் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது.

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவளித்துவரும் சமூகநலன் சார்ந்த ஆதரவின் போக்குகள் தொடர்பிலான அறிக்கையைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்டது.

குறுகியகால உதவி தேவைப்படும் குடும்பங்கள் குறைவு

2024ல் மொத்தம் 20,825 குடும்பங்கள் காம்கேர் குறுகியகால - நடுத்தரகால உதவித் திட்டத்தின்கீழ் இருந்தன. இது, 2023ல் இருந்த 22,960 குடும்பங்களைவிட ஒன்பது விழுக்காடு குறைவாகும் என்று அறிக்கை சுட்டியது.

கொவிட்-19 பெருந்தொற்றால் முதன்முதலில் வாழ்வாதாரங்கள் சீர்குலைந்த 2020ல், இத்திட்டத்தில் இருந்த 34,858 குடும்பங்களைவிட இந்த எண்ணிக்கை 40 விழுக்காடு குறைவாகும்.

இந்த உதவித் திட்டம், குடும்பங்களின் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில் தற்காலிக நிதி உதவியை வழங்குகிறது. மேலும், இது காம்கேர் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும்.

பயனாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு, 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூர் பொருளியல், வேலைச்சந்தை விரிவடைந்ததைச் சுட்டிக்காட்டுவதாக அமைச்சு கூறியது.

பொருள், சேவை வரியை உயர்த்துவதால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் வழங்கியுள்ள உத்தரவாதத் தொகுப்புத்திட்டம், சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் திட்டம் உள்ளிட்ட பண உதவித் திட்டங்களும் இந்தக் குறைவுக்குப் பங்களித்துள்ளன.

பல குடும்பங்கள் இன்னும் நிதி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன

குறுகியகால - நடுத்தரகால உதவித் திட்டத்தில் இருந்த குடும்பங்கள் 2024ல் சராசரியாக ஆறு மாதங்களுக்கு உதவி பெற்றன.

ஒரு பயனாளிக்குச் சராசரியாக மாதந்தோறும் வழங்கப்பட்ட தொகை $380ஆக இருந்தது. ஒட்டுமொத்தமாக, 2024ல் இத்திட்டத்தின்கீழ் அரசாங்கம் $94 மில்லியன் வழங்கியுள்ளது என்றும் இது, 2023ல் வழங்கப்பட்ட $105.1 மில்லியனைவிட குறைந்துள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.

எனினும், சில குடும்பங்களிடையே நீடித்த நிதிப் பிரச்சினைகள் இருப்பதையும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2021ல் இத்திட்டத்திலிருந்து வெளியேறிய குடும்பங்களில் சுமார் 49 விழுக்காட்டினர், மூன்று ஆண்டுகளுக்குள் உதவிக்காகத் திரும்பி வந்தனர்.

திரும்பி வர அதிக சாத்தியமுள்ளவர்களில் இளம் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள், மருத்துவ ரீதியாக வேலை செய்ய முடியாத விண்ணப்பதாரர்கள், குறைந்த கல்வித் தகுதியுள்ளவர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும் சிக்கலான, நீண்டகாலச் சவால்களை இது சுட்டிக்காட்டுகிறது.

வருமான உயர்வு மத்தியில் நீண்ட கால ஆதரவு குறைவு

காம்கேர் நீண்டகால உதவித் திட்டத்திலும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இத்திட்டம், வயது அல்லது நோய் காரணமாக நிரந்தரமாக வேலை செய்ய இயலாத, குறைந்த குடும்ப ஆதரவு உள்ள தனிநபர்களுக்கு ஆதரவளிக்கிறது.

கடந்த ஆண்டு 3,240 குடும்பங்கள் இத்திட்டத்தின்கீழ் இருந்தன. இது, 2023ஐவிட ஏழு விழுக்காடு குறைவு என்பது மட்டுமல்லாமல், ஐந்து ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான எண்ணிக்கையும் ஆகும்.

மூத்தோர் அதிக காலம் வேலை செய்வது, இளம் தலைமுறையினர் அதிக சேமிப்புகளைக் கொண்டிருப்பது, மூத்தோருக்கான அரசாங்கத்தின் ஆதரவு விரிவடைந்தது ஆகியவற்றின் காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

தற்போது, நீண்டகால உதவித் திட்டத்தில் உள்ள ஒரு நபர் கொண்ட குடும்பத்திற்கு மாதந்தோறும் $760 கிடைக்கிறது.

பணவீக்கத்தைக் கணக்கில் கொண்ட பிறகு, நடுத்தர குடும்பத்தைக் காட்டிலும், கீழ்நிலையில் உள்ள 20 விழுக்காடு குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு நபருக்கு வேலைமூலம் கிடைக்கும் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்