அண்மைய ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அது சார்ந்து இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் புற்றுநோய் பதிவகம் வெளியிட்ட அதன் 2023ஆம் ஆண்டறிக்கை தரவுகளின்படி, 2012ஆம் ஆண்டிலிருந்து புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 21 விழுக்காடு குறைந்துள்ளது என்று அறியப்படுகிறது.
ஜனவரி 2026ல் தேசிய நோய்ப் பதிவக அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அத்தரவுகளின்படி, 2019-2023க்கு உட்பட்டக் காலகட்டத்தில் ஒவ்வொரு 100,000 பேருக்கு 91 புற்றுநோய் இறப்புகள் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2019-2023 காலப்பகுதியில் 72 ஆகக் குறைந்துள்ளது.
அதே வேளையில், நோய் பாதிப்புக்குள்ளானோர் ஐந்து ஆண்டு உயிர்வாழும் விகிதம் 53 விழுக்காட்டிலிருந்து 61 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.
ஆண்களைப் பாதிக்கும் பிராஸ்டேட் புற்றுநோய், 2019 முதல் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் ஆக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோயாக இருந்துள்ளது. இவ்வகைப் புற்றுநோயால் 8,114 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்த இடத்தில் மலக்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் இருந்தன. மேலும் நுரையீரல், மலக்குடல், கல்லீரல் புற்றுநோய்கள் ஆண்களின் இறப்புக்கு முக்கிய காரணங்களாகவும் இருந்தன என்றும் அறிக்கை சுட்டியது.
அதேவேளையில் பெண்கள், சிறுமிகள் உயிரிழப்புக்கு காரணமாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களும் அமைந்தன.
சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் மையத்தின் மருத்துவப் புற்றுநோயியல் துறையின் துணைத் தலைவர் டாக்டர் தாம் சீ கியான், மருத்துவக் கண்டுபிடிப்புகள், துல்லியமான பரிசோதனைகள், மேம்பட்ட சிகிச்சை முறைகளே இறப்பு விகிதக் குறைவுக்குக் காரணம் எனக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் மக்கள் தொகை மூப்படைவதால், அதற்கேற்ப புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிப்பதாக டாக்டர் தாம் மேலும் குறிப்பிட்டார்.
அதே வேளை, 40 வயதிற்குட்பட்ட இளையர்களிடையே புற்றுநோய் பாதிப்பு 34 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், உடல் எடை குறைதல் அல்லது தீராத சோர்வு போன்ற அறிகுறிகளை இளையர்கள் அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையே தேசியப் பல்கலைக்கழக புற்றுநோய்க் கழகத்தின் ‘குருதியியல்-புற்றுநோயியல்‘ துறையின் ஆலோசகரான மருத்துவர் குளோரியா சான், ‘‘புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம்; அவற்றால் ஏன் இளையர்கள் பெருமளவில் இறக்கிறார்கள்? என்பதைக் கண்டறிய உலகளாவிய அளவில் தற்போது விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து குறையும் என்பதில் மருத்துவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்,’’ என்று கூறியுள்ளார்.
மேலும், “தொற்றுநோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, வலி உள்ளிட்ட சிகிச்சை சார்ந்த பக்கவிளைவுகளை மருத்துவர்கள் திறம்பட மிகவும் கவனத்துடன் கையாள்வதாக சொன்ன திருவாட்டி சான், இது சிகிச்சை தொடர்பான இறப்புகளைக் குறைப்பதுடன், நோயாளிகள் நீண்ட காலத்திற்குப்பலனளிக்கும் சிகிச்சையில் இருக்கவும் அனுமதிக்கிறது,” என்றும் சொன்னார்.
பொதுச் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் எப்போதும் போல முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் என்று, குறிப்பிட்ட அவர் உடற்பருமன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கையாள்வதே இனி வரும் காலங்களில் முக்கியச் சவாலாக இருக்கும் என்றும் கூறினார்.

