கடந்த பத்தாண்டுகளில் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை சுமார் 60 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் சுமார் 145,000 குடிமக்கள் இந்த வயதினரைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இது 2015ல் 91,000 ஆக இருந்தது. இந்த மூத்த குடிமக்கள் 2025ல் அனைத்து சிங்கப்பூரர்களில் 4 விழுக்காட்டினராக இருந்தனர். இது 2015ல் 2.7 விழுக்காடாக இருந்தது.
இந்தப் பிரிவில், 10 பேரில் ஆறு பேர் பெண்கள்.
2026ஆம் ஆண்டில் சிங்கப்பூர் “சூப்பர்-ஏஜட்” நிலையை அடையும் நிலையை இந்த எண்ணிக்கை குறிக்கிறது. அப்பொழுது ஐந்து சிங்கப்பூரர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்.
அதே நேரத்தில், வயது முதிர்ந்தவர்களுக்குப் பொருளியல் ஆதரவை வழங்கக்கூடிய, பொதுவாக 20 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும் - வேலை செய்யும் வயதுடையவர்களின் எண்ணிக்கையும் விகிதமும் குறைந்துள்ளது. இது முதியோருக்கு ஆதரவளிக்கும் மக்கள் விகிதம் குறைய வழி விட்டுள்ளது.
வயதான மக்கள்தொகையைப் பிரதிபலிக்கும் விதமாக, இங்குள்ள குடிமக்களின் சராசரி வயது ஜூன் 2024ல் 43.4 ஆண்டுகளில் இருந்து ஜூன் 2025ல் 43.7 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இது 2015ல் 40.7 ஆக இருந்தது.
தேசிய மக்கள்தொகை மற்றும் திறனாளர் பிரிவு செப்டம்பர் 29ஆம் தேதி அதன் வருடாந்தர மக்கள்தொகை 2025 அறிக்கையில் இந்த எண்களை வெளியிட்டது. இது கடந்த ஆண்டு சிங்கப்பூரின் முக்கிய மக்கள்தொகை போக்குகள் குறித்த ஆகக் கடைசி தகவலை வழங்குகிறது.
கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களின் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 24 விழுக்காட்டு குடிமக்கள் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டில் சுமார் 20.7 விழுக்காட்டு குடிமக்கள் இந்த வயதினராக உள்ளனர். இது 2015ல் 13.1 விழுக்காட்டிலிருந்து அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், 20 முதல் 64 வயதுடையவர்களின் விகிதம் 2015ல் 64.5 விழுக்காட்டிலிருந்து 2025 ஜூன் மாதத்தில் 59.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று குறிப்பிட்ட அறிக்கை, சிங்கப்பூரின் மக்கள் தொகை வேகமாக மூப்படைந்து வருவதை வருடாந்தர தரவுகள் காட்டுகின்றன என்றும் தெரிவித்தது.