பள்ளிகள், உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் மின்சிகரெட் வைத்திருந்தது அல்லது பயன்படுத்தியது தொடர்பில் கடந்த 2024ஆம் ஆண்டு 2,000 சம்பவங்கள் பதிவாகின.
இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 800ஆகவும், 2023ஆம் ஆண்டில் 900ஆகவும் இருந்தது.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி உறுப்பினர் ரேச்சல் ஓங் எழுப்பிய கேள்விக்கு சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் எழுத்துவழி அளித்த பதில்மூலம் இது தெரியவந்துள்ளது.
மாணவர்களிடம் மின்சிகரெட் புழக்கத்தைத் தடுக்கும் நோக்கில், கல்வி அமைச்சுடன் இணைந்து சுகாதார அறிவியல் ஆணையம் அமலாக்க நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டிற்குமுன், பள்ளிகள், உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த 50க்கும் குறைவான மாணவர்களே மின்சிகரெட் குற்றம் தொடர்பில் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் பரிந்துரைக்கப்பட்டனர் என்று கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சென்ற ஆண்டு பதிவான சம்பவங்களில், 13 விழுக்காட்டு மாணவர்கள் ஒரே ஆண்டில் மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்ததாகத் திரு ஓங் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மின்சிகரெட் வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவதற்கான தண்டனைகள் குறித்து சுகாதார அறிவியல் ஆணையமும் சுகாதார அமைச்சும் மறுஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புகையிலை (விளம்பரம் மற்றும் விற்பனைக் கட்டுப்பாடு) சட்டத்தின்கீழ், மின்சிகரெட் வாங்கினால், பயன்படுத்தினால் அல்லது வைத்திருந்தால் $2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.