சிங்கப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டில் உயிரை மாய்த்துக்கொண்டோரின் இறுதி அதிகாரபூர்வ எண்ணிக்கை, முதலில் கணிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கணிசமான அளவு அதிகமாகப் பதிவாகியிருந்தது.
முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் இறுதி அதிகாரபூர்வ எண்ணிக்கைக்கும் ஓரளவு வித்தியாசம் இருக்கலாம் என்பது எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்ட அளவில்தான் இறுதி எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் திங்கட்கிழமை (ஜூலை 28) அறிக்கையில் தெரிவித்தது.
2023ஆம் ஆண்டில் உயிரை மாய்த்துக்கொண்டோரின் எண்ணிக்கை முதலில் 322 எனக் கணிக்கப்பட்டிருந்தது. இறுதி எண்ணிக்கை 34.8 விழுக்காடு கூடி, 434ஆகப் பதிவானது.
முதலில் கணிக்கப்பட்ட எண்ணிக்கையை ஆணையம் சென்ற ஆண்டு வெளியிட்டது. இறுதி எண்ணிக்கை இம்மாதம் வெளியிடப்பட்டது.
2020 - 2022 காலகட்டத்தில் உயிரை மாய்த்துக்கொண்டோரின் இறுதி எண்ணிக்கையில் இதேபோன்ற மாற்றம் காணப்பட்டது. அந்தக் காலகட்டத்தின் எண்ணிக்கை, 378க்கும் 476க்கும் இடைப்பட்டு இருந்ததாக ஆணையம் விளக்கியது
உயிரை மாய்த்துக்கொண்டோரின் எண்ணிக்கையை கணிப்பது பொதுமக்களுக்குத் தவறான கண்ணோட்டத்தைத் தரக்கூடும் என்று மனநலப் பராமரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ள சிலர் கவலைதெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டில் கணிக்கப்பட்ட எண்ணிக்கை, 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகக் குறைவானதாக இருந்தது. பிறகு இறுதி எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்தது தனக்கு அதிர்ச்சியளித்தது என்று இளையர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிலீஸ்டே இயக்கத்தைத் தொடங்கியோரில் ஒருவரான இலெயின் லெக் கூறினார்.
அதேபோல், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் மனநல ஆர்வலருமான அந்தியா ஓங், கணிக்கப்பட்ட எண்ணிக்கையை முதலில் வெளியிடுவதற்குப் பதிலாக ஏன் காத்திருந்து இறுதி எண்ணிக்கையை வெளியிடக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
கணிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் இறுதி எண்ணிக்கைக்கும் இடையே 35 விழுக்காடு வித்தியாசம் பதிவானால், கணிக்கப்பட்ட எண்ணிக்கையின் நம்பகத்தன்மையை இழந்துவிடுவதுபோல் ஆகிறது என திருவாட்டி ஓங் குறிப்பிட்டார்.

