சிங்கப்பூருக்கு இவ்வாண்டு ஏறக்குறைய 1,600 பெருஞ்செல்வந்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம் எனக் குடிபெயர்வு முதலீட்டாளர் ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கையில் அது பாதி என்றும் குறிப்பிட்டது. கடந்த 2024ஆம் ஆண்டில் ஏறக்குறைய 3,500 கோடீஸ்வரர்கள் சிங்கப்பூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வேறு இடங்களுக்குக் குடிபெயரும் செல்வந்தர்கள் பற்றிய 2025 அறிக்கையில் சாதனை அளவாக உலகம் முழுவதும் 142,000 பெருஞ்செல்வந்தர்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்குக் குடிபெயரவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய செல்வந்தர்கள் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குக் குடிபெயரும் போக்கு குறைந்துவருகிறது.
இதற்கிடையே, தாய்லாந்துக்கு இவ்வாண்டு ஏறக்குறைய 450 பெருஞ்செல்வந்தர்கள் குடிபெயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. சிங்கப்பூருக்குக் கடும்போட்டியாகப் பேங்காக் தன்னை முன்னிலைப்படுத்துவதாக அறிக்கை குறிப்பிட்டது.
சீனா, வியட்னாம், தென்கொரியா ஆகிய நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் தாய்லாந்தின் துடிப்புமிக்க பேங்காக் நகரை அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், சிங்கப்பூரின் நிலையான அரசியல் சூழல், சீரான நிதித் துறை, கவர்ச்சியான வரிக் கொள்கைகள், உயர்தரமான வாழ்க்கைமுறை ஆகியவை நிச்சயமற்ற உலகில் ஒரு கருவூலம் என்று நிபுணர்கள் கூறினர்.