மாரடைப்பு ஏற்பட்ட ஆடவருக்குப் பொது இடத்தில் உதவிய தாதியர்

மாரடைப்பு ஏற்பட்ட ஆடவருக்குப் பொது இடத்தில் உதவிய தாதியர்

படம்: கூ டெக் புவா மருத்துவமனை

16 Aug 2026 - 8:03 pm

2 mins read

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் பொது இடத்தில் காணப்பட்ட ஆடவர் உயிர் பிழைக்க உதவி செய்த தாதியர் மூவரைப் பாராட்டியுள்ளது.

ஈசூன் வட்டாரத்தில் கூடைப்பந்து விளையாட்டின்போது ஆடவர் ஒருவர் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

அவரைச் சுற்றி கூட்டம் கூடி நிற்கையில், பணிநேரம் முடிந்து கூடைப்பந்து விளையாட்டு நடைபெற்ற இடத்தில் காணப்பட்ட தாதியர் மூவர் ஆடவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.

ஸ்டாஃப் தாதி எரோ பெர்பென்சானா, மூத்த ஸ்டாஃப் தாதி பென்சன் சால்வடோர் லி ஹியன், மூத்த துணைத் தாதி டயோனஸ் பார்செலோன் உர்சியா ஆகிய மூவரும் தங்கள் நற்செயலுக்காகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையிடமிருந்து விருது பெற்றனர்.

அவர்கள் கூ டெக் புவாட் மருத்துவமனையில் பணிபுரிகின்றனர்.

தாதியர் மூவரும் ‘சூ சீ ஹியூமெனிஸ்டிக் யூத்’ என்ற நிலையத்திற்கு அருகே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் விளையாட்டில் இணைவதற்காகக் காத்திருந்தபோது சம்பவம் நேர்ந்ததாக மருத்துவமனை குறிப்பிட்டது.

தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட விளையாட்டாளர் தடுக்கி விழுந்ததாகத் தெரிகிறது.

ஆனால், சிறிது நேரத்தில் கீழே விழுந்த ஆடவரின் உடல் இறுக்கமானதுடன் அவரது முகம் நீல நிறத்திற்கு மாறி மூச்சுவிட திணறினார்.

ஆடவரைச் சோதித்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்ததை தாதி கண்டறிந்தார். அதையடுத்து உடனே அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்ததில் ஆடவரின் நாடி மீண்டும் துடிக்கத் தொடங்கியதாக மருத்துவமனை குறிப்பிட்டது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆடவர் முழுமையாக விழித்திருந்தார் என்றும் அவரால் பேச முடிந்தது என்றும் அது பகிர்ந்துகொண்டது.

குறிப்புச் சொற்கள்