அந்திமகாலப் பராமரிப்பை விரிவுபடுத்தும் வகையில், பொதுச் சுகாதாரக் குழுமம் அதிகமான தாதியருக்குப் பயிற்சி வழங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங். 2030ஆம் ஆண்டுக்குள் பத்தாயிரம் தாதியருக்குப் பயிற்சி வழங்கத் திட்டமிட்டாதாகவும், திறன் மேம்பாடு எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடைபெறுவதாவும் அவர் தெரிவித்தார்.
சிறந்த தாதியருக்கான திறன் விருதுகள் (Nurses’ Merit Award) வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுகாதார அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மொத்தம் 151 தாதியரைச் சிறப்பித்த இவ்வாண்டின் விருது வழங்கும் விழா, திங்க்கட்கிழமையன்று, ஷாங்ரி-லா ஹோட்டல் மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.
மூப்படையும் சிங்கப்பூர்ச் சமூகத்தில், தாதியரின் பணிகளிலும் மாற்றம் ஏற்படுவதைச் சுட்டிய அமைச்சர் ஓங், வருங்காலத்தில் தாதியர் விரைவாகவும், கூடுதல் தன்னாட்சி, தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
“குடியிருப்பாளர்களின் மருத்துவ, செயல்பாட்டு, உளவியல், சமூகத் தேவைகளைச் சிறப்பாகக் கவனிக்கும் வகையில் நீண்டகாலப் பராமரிப்பில் தாதியரின் திறன்களையும் தரத்தையும் உயர்த்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார் அவர்.
தாதிமை இல்லங்கள் - தாதிமைப் பணி மேம்பாட்டுப் பணிக்குழு இவ்வாண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டதைச் சுட்டிய அவர், இது நீண்ட காலப் பராமரிப்புத் துறையில், திறன் மாற்றம் தொடர்பான முயற்சிகளை வழிநடத்தும் நோக்கில் தாதியர் தலைவர்களை ஒன்றிணைப்பதாகவும் குறிப்பிட்டார்.
தாம் அண்மையில் எதிர்கொண்ட ஒரு சம்பவம் தாதிமைப் பணியின் முக்கியத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்ததை விளக்கிய அவர், “தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அண்மையில் சென்றபோது, அந்த மருத்துவமனை மட்டும் 3,100 தாதியருக்கு பொது அந்திமகாலப் பராமரிப்பு தொடர்பான பயிற்சிகளை அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதை அறிந்தேன். பல பொதுச் சுகாதார அமைப்புகள் இதனை மேற்கொள்கின்றன,” என்றார்.
இப்பயணத்தின் வெற்றி திட்டங்களை மட்டும் சார்ந்ததன்று எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஓங், “புதிய பொறுப்புகளை ஏற்கவும், புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும், களமாற்றத்திற்குத் தலைமை தாங்கவும் தயாராக இருக்கும் தாதியரைச் சார்ந்தது,” என்றார்.
151 தாதியரைச் சிறப்பித்த விருது விழா
தொழில்முறை மேம்பாட்டிலும், தாதியர் பணிச்சூழல் மேம்பாட்டுக்கும் பங்களிப்புகளை வழங்கிய, சிறந்த செயல்திறன் மிக்க 151 தாதியரை சிறப்பித்தது இவ்வாண்டின் சிறந்த தாதியர் திறன் விருது விழா.
பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு தொடங்கி, சமூகப் பராமரிப்புத் துறை, தனியார்த் துறை தாதியர் என அனைத்துத் தரப்பிலும் சிறந்து விளங்கியோர்க்கு இவ்விருது வழங்கப்பட்டது.
விருதாளர்களுக்கு, தங்கள் சீருடையின் அங்கமாக அணிந்துகொள்ளும் பதக்கத்துடன் ஆயிரம் வெள்ளி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் ஆயுதப் படையில், போர் மருத்துவத் துறையில் நுழையும் நோக்குடன் தாதிமைப்பணி அனுபவம் பெற வந்த வினோத் ராஜாந்திரன் முத்து, 32 ஒரு நோயாளியுடன் பழகிய அனுபவத்தினால் இதனையே தொழிலாக மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
தேசியச் சிறுநீரக அறக்கட்டளையில் தாதிமைப் பணி மேற்கொள்ளும் இவர், “இது பிற இடங்களில் தாதிமைப் பணி மேற்கொள்வதைக் காட்டிலும் மாறுபட்டது. மாதக்கணக்காக, ஒவ்வோர் வாரமும் பலமுறை நோயாளிகள் வரவேண்டியிருக்கும். வெவ்வேறு சூழல், மனநிலை கொண்ட நோயாளிகளைப் பராமரிப்பது சவாலானது. ஆனால் நிறைய கற்றுக்கொள்கிறேன்,” என்றார்.
“அந்திமக் காலத்தில் உள்ள நோயாளிகளையும், மிகச் சோகமான பின்புலம் கொண்டோரையும் காண நேரிடும். அவர்களுடன் பழகுவது அவசியம். ஆனால் அது என்னைப் பாதிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.
பணி, தொண்டூழியம், தாதியர் சமூகக் குழுக்கள் என பரபரப்பாக இயங்கும் இவர், “விருது பெற்றதில் மகிழ்ச்சி. இது நான் இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருப்பதைக் காட்டுகிறது,” என்றார்.
ஏறத்தாழ 26 ஆண்டு அனுபவத்துடன் தாம்சன் மெடிக்கல் மூத்த தாதிமைக் கல்வியாளராக இருப்பவர் சித்ரா சாரங்கபாணி, 47.
தாம் இத்துறையில் நுழைந்தபோது மின்னிலக்கக் கற்றல் வளங்கள் இல்லை என்றும், சிறந்த வழிகாட்டிகளின் உதவியுடன் கற்றல் மேற்கொண்டதையும் சுட்டினார். தம்மைத் தொடர்ந்துவரும் புதிய தாதியருக்கான மின்னிலக்க வளங்களைக் கட்டமைக்கும் பணிகளில் இவர் ஈடுபடுகிறார்.
“தாதிமைப் பணியும், கற்பித்தல் என இரண்டும் என் மனதுக்கு நெருக்கமானவை. எனவே, தொடர்ந்து நானும் என்னை மேம்படுத்திக்கொள்கிறேன். ஈடுபாடு இருப்பதால் சுமை தெரிவதில்லை,” என்றார்.
ஒவ்வொரு நோயாளியையும் தமது குடும்பம் போல நடத்துவதயே தமது மாணவர்களுக்கு முக்கியப் பாடமாகக் கற்பிக்கிறார் சித்ரா. “இவ்விருது, நான் காட்டிய அர்ப்பணிப்பை அங்கீகரித்துள்ளது. இது பெருமையளிக்கிறது,” என்றார் சித்ரா.
கடந்த 15 ஆண்டுகளாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தாதியராகப் பணியாற்றும் ஹர்மிந்தர் சிங், “மருத்துவர், நோயாளி, அவரது குடும்பத்தினர், இயன்முறை மருத்துவர், உணவு நிபுணர் எனப் பலருடன் பணியாற்ற வேண்டியிருக்கும். இப்பணியை அர்த்தமுள்ளதாகக் கருதுகிறேன்,” என்றார்.
தாதியருக்குக் கற்பிக்கும் பணியிலும் ஈடுபடும் இவர், “எதையும் பாதுகாப்பாகக் கையாளவேண்டும் என்பதே நான் சொல்லும் பாடம். இதுவே, தவறுகளைத் தவிர்த்து தரத்தை உயர்த்தும்,” என்றார்.
இவ்விருது பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாகவும் சொன்னார் ஹர்மிந்தர் சிங்.

