2027 இறுதியில் பதவி விலகும் என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய்

2027 இறுதியில் பதவி விலகும் என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Oct 2026 - 5:06 pm

2 mins read

சிங்கப்பூர்த் தேசிப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) தற்போதைய தலைவர் டான் எங் சாய்யின் பதவிக்காலம் 2027 டிசம்பரில் முடிவடைவதால், அது தனது அடுத்த தலைவரைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளது.

65 வயதான டான், 10 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்த பிறகு அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளார்.

தமது இரண்டாவது ஐந்தாண்டு பதவிக்காலத்திற்குப் பிறகு, பதவிக்கால நீட்டிப்பைப் பெற விரும்பவில்லை என்றும் மீண்டும் பல்கலைக்கழகத்தின் கல்விப் பணிக்குத் திரும்பப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவின் துணைத் தலைவர் லியோ யிப் கையொப்பமிட்ட உள் சுற்றறிக்கை ஒன்றின் மூலம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்யுஎஸ்சின் அடுத்த தலைவரை அடையாளம் காண திரு லியோ யிப் தலைமையில் ஒரு தேடல் குழுவை அமைத்துள்ளதாக என்யுஎஸ் இயக்குநர் சபை கூறியது.

உலகளாவிய நிர்வாகத் தலைமைத்துவ தேடல் நிறுவனத்தால் அடையாளம் காணப்படும் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் இருந்து வரும் வேட்பாளர்களை இந்த இயக்குநர் சபை மதிப்பீடு செய்யும்.

முன்னாள் என்யுஎஸ் தலைவர் டான் சோர் சுவான் தேடல் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர். டான் எங் சாய் அதன் ஆலோசகராக இருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்யுஎஸ், தமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருவதாகவும், அதன் தலைவராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிகுந்த நன்றியுணர்வுடன் இருப்பதாகவும் திரு டான் எங் சாய் ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

“இன்னும் செய்ய வேண்டிய முக்கியமான பணிகள் உள்ளன. 2027ல் எனது பதவிக்காலம் முடியும் வரை நான் தொடர்ந்து எனது சிறந்த பங்களிப்பை வழங்குவேன். என்யுஎஸ்-ஐ அதன் அடுத்த உற்சாகமான கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அடுத்த தலைவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்