சர்ச்சையை அளவிட்டு அறிவுசார் உரைகளுக்கு ஆதரவு: என்யுஎஸ்

2 mins read
1f976293-d7e4-47bc-98b8-e7aa8883c7eb
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு தேசிய, புவிசார் அரசியல் சூழல்களையும் கவனத்தில் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) தனது கலை, சமூக அறிவியல் பள்ளி நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வெளிப்புறப் பேச்சாளர்களைக் கண்காணிக்கும் கட்டமைப்பு, அர்த்தமுள்ள அறிவுசார் சொற்பொழிவுகளை ஆதரிப்பதாகத் தெரிவித்து உள்ளது.

தேசிய, புவிசார் அரசியல் சூழல்களையும் கவனத்தில் கொள்ளும் வகையில் அந்தக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் கலை, சமூக அறிவியல் துறையின் (FASS) பேச்சாளர் கூறியுள்ளார்.

அந்தக் கட்டமைப்பை விமர்சித்து, சிங்கப்பூர் பொது சொற்பொழிவுகளை வளர்க்கும் Academia.SG இணையத்தளத்தின் மூன்று ஆசிரியர்கள் ஜனவரி 26ஆம் தேதி வெளியிட்ட கட்டுரைக்குப் பதில் அளிக்கும் வகையில் அந்தப் பேச்சாளரின் விளக்கம் வெளிவந்துள்ளது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் சுய தணிக்கையை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிறுவனமயமாக்கியதாக அந்தக் கட்டுரை குறைகூறியது.

நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கும் வெளிப்புறப் பேச்சாளர் சர்ச்சைக்குரிய வகையிலும் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையிலும் பேசக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்பதை அதற்கான படிவத்தில் தெரிவிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் கலை, சமூக அறிவியல் துறை புதிதாக அறிவித்துள்ள விதிமுறையைப் பற்றியது அந்தக் கட்டுரை.

அந்தப் புதிய முறை 2024 செப்டம்பரில் கொண்டு வரப்பட்டதைத் தெரிவிக்கும் கட்டமைப்பின் நகலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் பார்வையிட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அல்லது அதற்குப் பொறுப்பான துறையில் உள்ளோர் பேச்சாளர்களின் தரத்தை மதிப்பிடுவர். அவர்களின் ஆராய்ச்சி அம்சமும் பேசவிருக்கும் தலைப்பும் சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளனவா என்பதன் அடிப்படையில் அவர்களின் மதிப்பீடு இருக்கும்.

பேச்சாளர்கள் குறிப்பிட்ட சில சமூகங்கள் அல்லது அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தோராக இருந்தாலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவராக இருந்தாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதுகுறித்து எச்சரிப்பர். அவர் தமது உரையை சொந்தக் கருத்துகளுடன் நிகழ்த்துபவரா அல்லது வெளிநாட்டுக் கல்விமுறையைத் தழுவி பேசுபவரா என்பதையும் ஏற்பாட்டாளர்கள் கண்டறிவர்.

விண்ணப்பப் படிவத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு என்னும் தெரிவில் குறியிடும் பேச்சாளர்கள் அதிக ஆபத்து உள்ளவர்களாகக் கருதப்பட்டு, அவர்கள் இங்கு அழைக்கப்படுவதற்கு முன்னராக நிர்வாக ரீதியிலான மதிப்பீடுகளுக்குக் கட்டாயம் உட்பட வேண்டும் என்று புதிய முறை வலியுறுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்