பொய்யுரைக்கும் உண்மைக்குமான வேறுபாட்டைக் கண்டறிய நினைவூட்டு

பொய்யுரைக்கும் உண்மைக்குமான வேறுபாட்டைக் கண்டறிய நினைவூட்டு

2 mins read
aecbe13f-2f6b-4151-b747-e24b9efc5efb
படம்: - தமிழ்முரசு

சிங்கப்பூர் சட்டங்களை மீறுவதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழத்தின் (என்யுஎஸ்) ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அதன் தலைவர் டான் எங் சாய் புதன்கிழமை நினைவூட்டினார்.

சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து என்யுஎஸ் உதவிப் பேராசிரியர் சான் யிங் கிட் எழுதிய தவறான கருத்துகள் கொண்ட கட்டுரையை ‘ஈஸ்ட் ஏஷியா ஃபோரம்’ இணையத்தளம் வெளியிட்டது.

இதனால், அந்த இணையத்தளத்திற்கு ‘பொஃப்மா’ திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, என்யுஎஸ்சின் தலைவர், ஊழியர்களுக்கு சிங்கப்பூரின் சட்டங்கள் குறித்து நினைவூட்டும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார்.

“பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டிய கடமை, உலகளாவிய பல்கலைக்கழகமாக விளங்கும் என்யுஎஸ்சுக்கு உள்ளது.

“எங்கள் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் யாரேனும் தவறான தகவல் அளித்தாலோ தவறான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ பொதுமக்கள் என்யுஎஸ்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிதைந்துவிடும்.

“மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது, விமர்சிக்கும் சிந்தனையை ஊக்குவிப்பது, பொய்யுரைக்கும் உண்மைக்குமான வேறுபாட்டைக் கண்டறியும் திறனை வளர்ப்பது போன்றவை பேராசியர்களின் கடமைகளில் ஒன்றாகும்,” என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்யுஎஸ் ஊழியர்களுக்கான நடத்தை நெறிமுறைகளையும் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புக் கொள்கையிலிருந்து பல பிரிவுகளையும் அதில் அவர் சுட்டியுள்ளார்.

மேலும், நேர்மையின் அடிப்படையில், பணியாளர்கள் தகுதியுடனும் பொறுப்புடனும் தொழில் முறையுடனும் நடக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மதிப்புகள், ஒருமைப்பாடு, நற்பெயரை நிலைநிறுத்தும் வகையில் நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் எனவும் அதில் தெரிவித்திருந்தார்.

ஊழியர்கள் தங்கள் நடத்தையிலும் மற்றவர்களைக் கையாளும் விதத்திலும் சிங்கப்பூரின் சட்டங்கள், ஒழுங்குமுறைகளைக் கவனித்து அதைப் பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் என்யுஎஸ் விதிகளுக்கு ஊழியர்கள் இணங்க வேண்டும் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்