தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரையை அளவிட உதவும் புதிய கருவி

1 mins read
4d321190-2d1d-4e3a-8572-cee4c309a62f
ரத்தத்தில் உள்ள கொழுப்பு, லேக்டேட், சர்க்கரை போன்றவற்றை அளவிட உதவும் கையில் அணியக்கூடிய உணர்கருவி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் ஆய்வாளர்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பு, சர்க்கரை போன்றவற்றை அளவிட உதவும் புதிய உணர்கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உணர்கருவியைத் தோலின்மேல் பொருத்தினால் போதும்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், ‘ஏ*ஸ்டார்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சற்றே இழுத்து அணியக்கூடிய வகையில், ‘ஹைட்ரோஜெல்’ அடிப்படையிலான இந்த உணர்கருவியை உருவாக்கியுள்ளனர்.

நாட்பட்ட நோய்களைச் சமாளித்தல், தொலைமருத்துவ முறையில் நோயாளிகளைக் கண்காணித்தல் போன்றவற்றில் இது உதவும் என்று கூறப்பட்டது.

சிங்கப்பூர் ஆய்வாளர்களின் இந்தக் கண்டுபிடிப்பு குறித்து ‘நேச்சர் மெட்டீரியல்ஸ்’ எனும் சஞ்சிகையில் கடந்த ஜூன் மாதம் தகவல் வெளியானது.

பாரம்பரிய முறையில் ரத்தம், சிறுநீர், வியர்வை போன்றவற்றைச் சோதிப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு, சர்க்கரை உள்ளிட்டவற்றைத் திறம்படக் கண்காணிக்க முடியும் என்றாலும், அவற்றில் சில இடையூறுகளும் உள்ளன.

எடுத்துக்காட்டாக, ரத்தப் பரிசோதனைக்கு ஊசி மூலம் ரத்தத்தை எடுக்க வேண்டும். அதிக உடலுழைப்பு இல்லாதவர்களிடம் வியர்வையைத் தூண்ட இயலாது.

புதிய உணர்கருவி இத்தகைய சவால்களுக்குத் தீர்வுகண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறினர்.

மனித உடலில் தோலின் மேற்பகுதியிலேயே கொழுப்பு, லேக்டேட் (லேக்டிக் அமிலம்) போன்றவை காணப்படும் என்பதை அவர்கள் சுட்டினர்.

இதயநோய், நீரிழிவு போன்றவற்றுக்குக் காரணமான இவற்றின் அளவை அதிக சிரமமின்றி, துல்லியமாக மதிப்பிட முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்