உப்பு, சுவைச்சாறு (sauce), உடனடி நூடல்ஸ் போன்ற சோடியம் அதிகமுள்ள உணவுப்பொருள்கள் ஊட்டச்சத்து தரமதிப்பீட்டு வில்லைகளைக் (லேபிள்) கொண்டிருப்பது 2027 நடுப்பகுதிக்குள் கட்டாயமாக்கப்படும்.
உடல்நலத்துக்கு உகந்த உணவைத் தேர்வு செய்ய சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது.
தற்போது பானங்களில் இடம்பெறும் ‘ஏ’ முதல் ‘டி ‘வரையிலான தரப்படுத்தல் போலவே இதுவும் இருக்கும். ‘டி’ என்பது ஆகக் குறைந்த ஆரோக்கியத் தெரிவாகும். அதிக அளவு சோடியம், சர்க்கரை மற்றும் / அல்லது நிறைவுற்ற கொழுப்பை (saturated fat) இது கொண்டிருக்கும். இப்பொருள்களை விளம்பரப்படுத்த முடியாது.
தரத்தின் அடிப்படையை பயனீட்டாளர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் கவனத்துக்குரிய மூலப்பொருள்களும் இடம்பெறும்.
எடுத்துக்காட்டாக, உடனடி நூடல்ஸுக்கான உப்பின் அளவு ‘சி’ தரமும் அதன் நிறைவுற்ற கொழுப்பு ‘டி’ தரமும் கொண்டிருந்தால், அந்த நூடல்ஸ் ‘டி’ தரத்தைக் கொண்டிருக்கும். வில்லையில் நிறைவுற்ற கொழுப்பு குறிப்பிடப்படும்.
2020 டிசம்பரில் பானங்களுக்கு செயல்படுத்தப்பட்ட நியூட்ரி-கிரேடு திட்டம், பானங்களிலுள்ள சர்க்கரை அளவைக் குறைப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் அறிமுகத்திற்குப் பிறகு, முன்கூட்டியே பொட்டலங்களில் நிரப்பப்படும் பானங்களின் இடைநிலை சர்க்கரை அளவு, 2017ல் 7.1. விழுக்காட்டிலிருந்து 2023 செப்டம்பரில் 4.6 விழுக்காட்டுக்கு குறைந்துள்ளது.
இப்போது, இந்தப் புதிய தரமதிப்பீட்டு வில்லைத் திட்டத்தின்வழி, உப்பும் நிறைவுற்ற கொழுப்பும் மிகையாக உட்கொள்ளப்படும் போக்கைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முற்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) நடைபெற்ற சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் 55வது நிறைவாண்டு விழாவின்போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இத்திட்டத்தின் விரிவாக்கத்தை அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“நல்ல உடல்நலத்திற்கு அதிகம் செலவிடத் தேவையில்லை. எளிமையான சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது, துடிப்புடன் இருப்பது, நல்ல தூக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது, உப்பையும் சுவைச்சாற்றையும் எண்ணெய்யையும் குறைப்பது நலம் தரும்,” என்று அவர் கூறினார்.
ஆரோக்கிய உணவுத் தெரிவுகளுடன் சமைக்கும்போது சுவை தொடக்கத்தில சற்று மாறுபட்டதாக இருந்தாலும், காலப்போக்கில் ஆரோக்கிய சமையலில் மூலப்பொருள்களின் சுவை கூடுதலாக வெளிப்படும் என்றார் திரு ஓங்.