தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என்விடியா கணினிச் சில்லு விவகாரம்: மூவர்மீது மோசடிக் குற்றச்சாட்டு

2 mins read
bd32e350-1d79-448a-a85d-4843ae36e808
மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போன்ற நாடுகள் வழியாக என்விடியா நிறுவனத்தின் நவீன கணினிச் சில்லுகளைச் சீனா வாங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

என்விடியா கணினிச்சில்லு தொடர்பான வழக்கில் சிங்கப்பூரர் இருவர்மீதும் சீனர் ஒருவர்மீதும் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) நீதிமன்றத்தில் மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டது.

அண்மையில் சீனாவைச் சேர்ந்த டீப்சீக் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டங்கண்டன.

அதனைத் தொடர்ந்து, கணினிச்சில்லு தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் அமெரிக்காவின் என்விடியா நிறுவனத்தின் நவீன கணினிச்சில்லுகளை மூன்றாம் தரப்பினர் மூலமாகத் தந்திரமாக டீப்சீக் பெற்றதா என்பது குறித்து அமெரிக்கா விசாரித்து வருகிறது.

மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போன்ற நாடுகள் வழியாக அந்தச் சில்லுகளைச் சீனா வாங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஏரன் வூன் கோ ஜீ, 41, ஆலன் வெய் ஸாவ்லன், 49, என்ற இரு சிங்கப்பூர் ஆடவர்கள்மீதும் லீ மிங், 51, என்ற சீனர்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத வழங்குநரிடம் கணினிச் சேவையகங்கள் தொடர்பில் கடந்த 2023ஆம் ஆண்டு லீ மோசடி செய்ததாக நீதிமன்ற ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

வெய்யும் வூனும் சேர்ந்து 2024ஆம் ஆண்டில் அதேபோன்ற குற்றத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அம்மூவர் மீதான வழக்கு மார்ச் 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கடந்த ஜனவரியில், இலவச செயற்கை நுண்ணறிவு உதவியாளர் தொழில்நுட்பத்தை வெளியிட்டது. சில நாள்களிலேயே ஆப்பிள் செயலியகத்திலிருந்து ஆக அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற நிலையை அது எட்டியது.

இதனையடுத்து, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் மதிப்பில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$1.34 டிரில்லியன்) சரிவைச் சந்தித்தது.

குறிப்புச் சொற்கள்
என்விடியாசீனாஅமெரிக்கா