வேதி ஆலைகள் உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை எதிர்கொள்ளும் தீயணைப்பு வீரர்களுக்கு அபாயங்களை உணரும் ரோபோக்கள் விரைவில் உதவவுள்ளன.
சிங்கப்பூரின் உள்துறைக் குழு, தனது இயந்திரங்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக என்விடியா நிறுவனத்தின் அதிநவீனச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சில்லுகளைப் பயன்படுத்துவதே அதற்குக் காரணம்.
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட என்விடியாவின் அதிநவீன ‘ஜிபி300’ சில்லை சிங்கப்பூரில் பயன்படுத்தும் முதல் அமைப்பு என்ற பெருமையை உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (எச்டிஎக்ஸ்) பெற்றுள்ளது.
ஜிபி300 சில், தனது முந்தைய சில்லான ஜிபி200ஐ விட ஆழமாகச் சிந்திக்கும் திறனில் இரண்டு மடங்கு வேகமானது.
இது சொற்கள், படங்கள், குறியீடுகள் ஆகியவற்றை மிகவும் வேகமாகக் கையாளும் திறனையும் கொண்டுள்ளது.
இந்த புதிய ஜிபி300 சில்லுகள் அதிக அளவிலான கணினி ஆற்றலை வழங்குவதால், எச்டிஎக்ஸ் அமைப்பால் தனது ‘என்ஜின்’ (NGINE) செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேலும் சிறப்பாகப் பயிற்றுவிக்க முடியும்.
இதன்மூலம், சொற்கள், காணொளி, ஒலி ஆகியவற்றை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதோடு, பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் ரோபோக்களைப் பெரிய அளவில் கட்டுப்படுத்தவும் முடியும்.
புதன்கிழமை (செப்டம்பர் 23) சிங்கப்பூரில் நடைபெற்ற ‘என்விடியா ஏஐ தின’ மாநாட்டில் இந்தத் தகவலை எச்டிஎக்ஸ் வெளியிட்டது.
“என்விடியாவின் ஜிபி300 சில்லை சிங்கப்பூரில் முதன்முதலில் பயன்படுத்துவதன் மூலம், இப்போது அமைப்பால் மிகப்பெரிய பல திறன் ஏஐ கட்டமைப்பை பயிற்றுவிக்கவும், செயல்படுத்தவும் முடிகிறது” என்று எச்டிஎக்ஸ் கூறியது.
பாதுகாப்பு, காவல் குறித்து பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய தொழில்நுட்பக் கருவிகள் உள்துறைக் குழுவின் அதிகாரிகள் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாகச் செய்ய அனுமதிக்கும்.
“செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைத் தீயவர்களும் பயன்படுத்துவார்கள். எனவே, நாம் எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல்கள் மேலும் சிக்கலானதாக மாறக்கூடும்,” என்று எச்டிஎக்ஸ் குறிப்பிட்டது.
அதிகாரிகளை வேலையிலிருந்து மாற்றுவது புதிய தொழில்நுட்பத்தின் நோக்கமல்ல என்றும் அபாயகரமான பொருள்களைக் கையாளுதல், தீயணைப்பு போன்ற ஆபத்தான பணிகளைச் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களிடம் ஒப்படைப்பதே இலக்கு என்றும் எச்டிஎக்ஸ் கூறியது.
