போக்குவரத்து, ரயில் துறைகளுக்கான மனிதவளத்தையும் திறனாளர்களையும் வளர்க்க, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியும் எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ் நிறுவனமும் இரு புதிய பட்டயப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.
பொறியியல் (பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகள்) பட்டயக் கல்வி, சில்லறை விற்பனை (சில்லறை செயல்பாடுகள்) டபுள்யூஎஸ்கியூ பட்டயக் கல்வியுடன் போக்குவரத்துச் சேவை சான்றிதழ் ஆகியன அந்த இரு பட்டயப் படிப்புகள்.
இவ்விரு படிப்புகளிலும் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான பாடத்திட்டம் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
பகுதிநேர பட்டயக் கல்வியான பொறியியல் (பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகள்), இரண்டரை ஆண்டுகளில் நடத்தப்படும். வரும் அக்டோபர் முதல் இப்படிப்பு தொடங்குகிறது.
நிபுணத்துவ ஆற்றல் முறை திட்டத்தின்கீழ் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி உருவாக்கிய முதல் பகுதிநேர பட்டயக் கல்வியான இது, தற்போதுள்ள ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தவும் ரயில் துறையில் சேரவிருக்கும் பணியிடைக்கால ஊழியர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவும் உதவும்.
சில்லறை விற்பனை (சில்லறை செயல்பாடுகள்) டபுள்யூஎஸ்கியூ பட்டயக் கல்வியுடன் போக்குவரத்துச் சேவை சான்றிதழ், ஓராண்டுக்கு நடத்தப்படும் 20 நாள் படிப்பாகும்.
இப்படிப்பை முடிப்போர், பொறியியல் (பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகள்) பட்டயக் கல்வியை மேற்கொள்ளலாம். ரயில் துறையில் வெவ்வேறு வேலைகளில் சேருவதற்கான வாய்ப்புகளை அது வழங்கும்.

