நியூசிலாந்துப் பிரதமர் லக்சன் சிங்கப்பூருக்கு 3 நாள் வருகை

சிங்கப்பூர் - நியூசிலாந்து வணிக உறவை வலுப்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

நியூசிலாந்துப் பிரதமர் லக்சன் சிங்கப்பூருக்கு 3 நாள் வருகை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 May 2026 - 6:36 pm

2 mins read

அத்தியாவசியப் பொருள்களின் தடையற்ற வணிகத்தை உறுதி செய்யும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் மே 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதிவரை சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த 2025 அக்டோபரில் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ (CSP) ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்தப் பயணம் அமைகிறது.

பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பிரதமர் லக்ஸனும் திங்கட்கிழமை (மே 4) இருநாட்டுத் தலைவர்களின் வருடாந்திரக் கருத்தரங்கில் உரையாற்றுவர்.

அக்கூட்டத்தில் ‘அத்தியாவசியப் பொருள்கள் வர்த்தக ஒப்பந்தம்’ (Agreement on Trade in Essential Supplies (AOTES)) கையெழுத்தாக உள்ளது.

அந்தச் சட்டபூர்வ ஒப்பந்தம், நெருக்கடி காலங்களிலும் உணவு, எரிபொருள், மருத்துவப் பொருள்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யும்.

கொவிட்-19 நோய்த்தொற்றின்போது நியூசிலாந்தில் இருந்து முட்டை, இறைச்சி போன்ற உணவுகளும் சிங்கப்பூரிலிருந்து மருத்துவப் பொருள்களும் தடையின்றி பரிமாறப்பட்டன.

பயணத்தின் ஒரு பகுதியாக, திரு லக்சன் ஜூரோங் தீவு, சாங்கி கடற்படைத் தளம், கரையோரப் பூந்தோட்டங்கள் ஆகியவற்றைப் பார்வையிடுவார். மே 5ஆம் தேதி, அவர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், நாடாளுமன்ற நாயகர் சீ கியான் பெங் ஆகியோரைச் சந்திப்பார்.

2025ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, நியூசிலாந்தின் ஆறாவது பெரிய இறக்குமதி நாடாகவும், ஒன்பதாவது பெரிய ஏற்றுமதி இடமாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது.

வட்டார எரிசக்தி, விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த சிங்கப்பூர் எடுத்து வரும் தொடர் முயற்சிகளின் ஒரு முக்கிய அங்கமாக இந்தப் பயணம் கருதப்படுகிறது.

சிங்கப்பூர் தனது முதலாவது இருதரப்பு தாராள வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) 2001ஆம் ஆண்டில் நியூசிலாந்துடன் முதன்முதலில் மேற்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நியூசிலாந்துபயணம்வர்த்தகம்தடையற்ற வணிகம்ஒப்பந்தம்