‘ஜிசிஇ’ சாதாரண நிலை கணினிப் பாட மாணவர்களுக்குப் பாடக் கழிவு

2 mins read
b111734c-383f-4f3e-8a61-4302c58cd885
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தகவல் தொழில்நுட்பப் பள்ளியில் காணப்படும் மாணவர்கள். - படம்: நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி

கணினிப் பாடம் (computing) மேற்கொண்டு அதற்கான பொதுக் கல்விச் சான்றிதழ் (ஜிசிஇ) சாதாரண நிலைத் தேர்வில் போதுமான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பாடக் கழிவு (module exemption) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய மாணவர்கள், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பாடத் திட்டங்களை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான கணினி மொழி தேர்ச்சிப் பாடத்தை (சிஎம்யு) மேற்கொள்ளத் தேவையில்லை.

சிஎம்யு, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பாடத் திட்டங்களை மேற்கொள்ளும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அந்தக் கல்வி ஆண்டின் முற்பாதியில் கல்விக்குச் செலவிடும் 60 மணிநேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தை அவர்கள், நிபுணத்துவச் சான்றிதழ்களைப் பெறுவது, போட்டிகளில் பங்கேற்பது, தொழில்துறையில் அனுபவம்வாய்ந்த ஊழியர்களின் வழிநடத்தலில் வேலை அனுபவம் பெறுவது போன்ற நடவடிக்கைகளுக்காக செலவிடலாம்.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தகவல் தொழில்நுட்பப் பள்ளி வழங்கும் பொதுத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பாடத் திட்டம், நான்கு பட்டயக் கல்விப் பாடத் திட்டங்கள் ஆகிய அனைத்துக்கும் இந்தப் பாடக் கழிவு பொருந்தும்.

வர்த்தக மற்றும் நிதி தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு மற்றும் மின்னிலக்கத் தடயவியல், செயல்பாட்டுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் ஆய்வு, தகவல் தொழில்நுட்பப் பட்டயக் கல்விப் பாடத் திட்டங்களுக்கு சிஎம்யு பாடக் கழிவு பொருந்தும்.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தகவல் தொடர்புப் பள்ளி வழங்கும் பாடத் திட்டங்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்கும்.

அப்போது பாடக் கழிவுக்குத் தகுதிபெறும் மாணவர்களிடம் இதுகுறித்து தெரியப்படுத்தப்படும்.

மாணவர்களின் பாடத் திட்ட நிர்வாகிகள் தகவல் தெரிவித்து மாணவர்களை வழிநடத்துவர்.

குறிப்புச் சொற்கள்