ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக, முதலீட்டு ஒப்பந்தம் செய்த ஓசிபிசி வங்கி

ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக, முதலீட்டு ஒப்பந்தம் செய்த ஓசிபிசி வங்கி

1 mins read
வட்டார முதலீடு, வர்த்தகத்தை வளர்க்க ஐந்தாண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது
8b54adf8-ca0a-4a10-a6ed-89a372d58b93
சிங்கப்பூருக்கான ஆஸ்திரேலியத் தூதர் அலெஸ்டர் கொக்ஸ், ஓசிபிசி வங்கியின் உலக வர்த்தகப் பிரிவின் தலைவர் இலேய்ன் லாம் இருவரும் ஆஸ்திரேலியத் தூதரகத்தில் உத்திப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். - படம்: ஓசிபிசி வங்கி

ஓசிபிசி வங்கி சிங்கப்பூரில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகத்தில் ஆந்நாட்டுடனான ஐந்தாண்டு உத்திபூர்வ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.

ஒப்பந்தம் குறித்த விவரங்களை வங்கி புதன்கிழமை (மே 13) வெளியிட்டது.

அதன்படி, தென்கிழக்காசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வர்த்தகமும் முதலீடுகளும் பெருகிட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

அதிக வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் துறைகளில் கவனம் செலுத்தப்படும். எரிபொருள் ஆற்றல் பரிமாற்றம், உள்கட்டமைப்பு, வளங்கள், பசுமைப் போக்குவரத்து, நிதித் தொழில்நுட்பம், மின்னிலக்கப் புத்தாக்கம் ஆகிய துறைகள் அவற்றுள் அடங்கும்.

ஏப்ரல் மாதம் அதிகாரபூர்வமாகிய ஒப்பந்தத்தில், ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தென்கிழக்காசியாவின் முன்னணி தொழில்நிறுவனங்களுடன் இணைக்கப்படும்.

முதலீட்டாளர்கள் இடையிலான பொருத்தத்தை எளிதாக்கி, அறிவுசார் திட்டங்களைப் பரிமாற்றம் செய்துகொள்வதில் ஆதரவு நல்கி, சந்தைக்கு ஏற்றவகையில் நிறுவனங்கள் தயாராகச் செயல்படும் திட்டங்களை வடிவமைக்க இரு தரப்பும் எண்ணம் கொண்டுள்ளன.

2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் 2040ஆம் ஆண்டு வரையிலான தென்கிழக்காசிய பொருளியல் செயல்திட்டம் ஒன்றைத் தொடங்கியது. அதன் இலக்குகளுடன் உடன்படும் வகையில் தற்போதைய ஒப்பந்தத்தின் குறிக்கோள்கள் அமையும்.

2040ஆம் ஆண்டுக்குள், உலகின் நான்காம் பெரிய பொருளியலாக உருமாறும் என எதிர்பார்க்கப்படும் தென்கிழக்காசியாவுடன் ஆஸ்திரேலியாவின் வர்த்தகம், முதலீடுகளுக்கான தொடர்புகளை வலுவாக்கிட இத்திட்டம் விழைகிறது.

2025ஆம் ஆண்டின் மத்தியில் தென்கிழக்காசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இருவழி வர்த்தகம் S$2.9 பில்லியனிலிருந்து, S$180 பில்லியன் வரை எட்டி வரலாறு படைத்தது.

அதே காலகட்டத்தில், இவ்வட்டாரத்தின் ஆஸ்திரேலிய முதலீடுகள் S$1.8 பில்லியனிலிருந்து S$97 பில்லியனாக ஏற்றம் கண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்