சிங்கப்பூரின் ஆகப் பெரிய அளவிலான சைக்கிளோட்டப் போட்டியான ‘ஓசிபிசி சைக்கிள்’ மே முதல் வார இறுதியில் நடைபெறுகிறது.
17வது சைக்கிள் போட்டிக்கான பதிவு வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 14) தொடங்கியது. 7,000 பேர் வரை ஈர்க்க முடியும் என ஓசிபிசி வங்கி நம்புகிறது.
சைக்கிளோட்டிகள் தீவைச் சுற்றிய பயணத்தை முடிக்க ஒரு புதிய மெய்நிகர் சவாரியும் இம்முறை இடம்பெறும் என்று ஓசிபிசி கூறியது. இதற்கு 100 இடங்கள் மட்டுமே உள்ளன. இதில் பங்குபெற மே 3 முதல் ஜூன் 2 வரைப்பட்ட காலத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒரே தடவை குறைந்தபட்சம் 120 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தை நிறைவுசெய்ய வேண்டும்.
மேலும், இந்த ஆண்டு அனைத்து விரைவுப் பாதை சவால் கிண்ணப் பிரிவுகளும் (தென்கிழக்கு ஆசியா, பெருநிறுவனம், மன்றம்) ஒன்றாக இணைக்கப்பட்டு ‘ஓசிபிசி சைக்கிள் விரைவுப் பொதுவிருதுப் போட்டி’ ஆக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிகேத்தலன், பிரோம்ப்டன், எஃப்&என், கிரேட் ஈஸ்டர்ன் உள்ளிட்ட பதினொரு நிறுவனங்களும் பெயர் பெற்ற அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன.
சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் இந்த ஆண்டு நிகழ்வை வங்கி ஊக்குவிப்பதாக ஓசிபிசி வங்கி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹெலன் வோங் கூறினார். உடல்நலம், உடற்தகுதிக்கான விளையாட்டாகவும் சமூகப் பிணைப்புக்கான சமூக நடவடிக்கையாகவும் உள்ளது என்றார் அவர்.
2030ஆம் ஆண்டுக்குள் தீவு சைக்கிள் பாதைக் கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் 1,300 கி. மீ சைக்கிள் பாதைகள் அமைவதால், இந்த விளையாட்டின் மீதான ஆர்வம் வளரும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களை https://ocbccycle.com என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.