தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்வாழ் காட்சியகம் சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிக்கும்: அமைச்சர் கிரேஸ் ஃபூ

2 mins read
மூன்று மடங்கு பெரிய அளவுடன் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் திறப்பு
2d42192f-f729-4f96-a1c7-d545c18f63c3
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் திறக்கப்பட்டுள்ள கடல்வாழ் காட்சியகத்தின் முகப்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

சிங்கப்பூர்க் கடல்வாழ் காட்சியகமானது (Oceanarium) நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழல் சார்ந்த இலக்குகளை எட்டவும் பங்களிக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா (ஆர்டபிள்யூஎஸ்) ஒருங்கிணைந்த உல்லாசத் தளத்தில் இடம்பெற்றுள்ள கடல்வாழ் காட்சியகமானது விரிவான புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு புதன்கிழமை (ஜூலை 23) திறக்கப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஃபூ, அக்காட்சியகம் சிங்கப்பூரை உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்த கைகொடுக்கும் என்றார்.

“புதுப்பிக்கப்பட்ட, நம்மை மூழ்கடிக்கும் அனுபவங்களுடன் கூடிய கடல்வாழ் காட்சியகம், உள்ளூர், அனைத்துலகச் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் திறனை வலுப்படுத்தும். அதே நேரத்தில், கடல்வாழ் கல்வி, ஆய்வு, பாதுகாப்பு தொடர்பிலான அதன் கவனம் சிங்கப்பூரின் பரந்த நீடித்த நிலைத்தன்மை நோக்கங்களுக்கும் ஆதரவளிக்கும்,” என்று திருவாட்டி ஃபூ சொன்னார்.

முன்பு ‘சீ அக்வேரியம்’ என்று அழைக்கப்பட்ட அக்காட்சியகம் கடந்த 2012ஆம் ஆண்டில் திறக்கப்பட்டபோது உலகின் ஆகப் பெரிய கடல்வாழ் காட்சியகமாகவும் பொதுமக்களுக்கான நீர்வாழினக் காட்சியகமாகவும் விளங்கியது.

புதுப்பிப்புப் பணிகளுக்காகக் காட்சியகம் இவ்வாண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மூடப்பட்டது.

இப்போது அதனைப்போல மூன்று மடங்கு பெரிய அளவுடன் திறக்கப்பட்டுள்ள கடல்வாழ் காட்சியகமானது, 22 மண்டலங்களில் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் கொண்டுள்ளது.

அதனை ஒட்டி அமைந்துள்ள ஆய்வு, கற்றல் நிலையத்தில் ஆழ்ந்த கற்றல் ஆய்வகங்கள், கூட்டுப் பணியிடங்கள், கருத்தரங்கு அறைகளைக் கொண்டுள்ளது.

முழுக்கவும் சூரிய மின்னாற்றலில் இயங்கும் அந்நிலையமானது கடல்வாழ் அறிவியல் வல்லுநர்களின் ஆய்வுகளுக்கும் கடல்சார் அறிவியலை மக்களிடம் கொண்டுசெல்லும் முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும்.

தனது $6.8 பில்லியன் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடல்வாழ் காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது என்றும் அது கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக சிங்கப்பூரின் நிலையை உயர்த்தும் என்றும் ஆர்டபிள்யூஎஸ் வியாழக்கிழமை (ஜூலை 24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்