தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைதியிடமிருந்து லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் சிறை அதிகாரி

2 mins read
87ba0ec9-538e-45df-afc2-ee7dd35a543b
கம்மது அஸ்ரி அப்துல் ரஹிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆபாசப் படங்கள், மருத்துவர்கள் மட்டும் வழங்கவேண்டிய கட்டுப்படுத்தப்பட்ட மருந்து வகைகள் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாகக் கொண்டுவர கைதியிடமிருந்து சிறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

சாங்கி சிறைச்சாலைக்குள் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களைக் கொண்டுவர லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் 39 வயது முகம்மது அஸ்ரி அப்துல் ரஹிம் மீது, சேவைக்கு கைமாறு பெற்றதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவ்வழக்கின் முடிவு தெரியும் வரை அஸ்ரிக்குப் பாதி சம்பளம் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் சிறைச் சேவை அறிக்கையில் தெரிவித்தது.

சிறைக் கைதி முகம்மது யூசோஃப் கசிமாஸ், 50, என்பவரிடமிருந்து அஸ்ரி மொத்தம் 3,700 வெள்ளி கையூட்டு பெற்றதாக நம்பப்படுகிறது என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு வேறோர் அறிக்கையில் தெரிவித்தது. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அஸ்ரி அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.

சஞ்சிகைகள் உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களை சாங்கி சிறைச்சாலைக்குள் கொண்டுவருவதற்குக் கைமாறாக அவர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டது. பல வேளைகளில் வேறு இரு சிறைக் கைதிகளான வில்சன் ஆங், 37, முரளி விக்னேஸ்வரன், 36, இருவரும் அஸ்ரிக்கு லஞ்சம் தர யூசோஃபுக்கு உதவியதாகவும் நம்பப்படுகிறது.

லஞ்சம் கொடுத்ததன் தொடர்பில் யூசோஃப் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. முரளி, ஆங் இருவர் மீதும் அதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

தனக்காக வாதிட வழக்கறிஞரை நியமிக்கப்போவதில்லை என்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்த அஸ்ரி, தான் குற்றங்களை ஒப்புக்கொள்ளப்போவதாக சொன்னார். தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர், வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளப்போவதாக தற்போது சிறைத் தண்டனையை நிறைவேற்றிவரும் யூசோஃப், முரளி இருவரும் தெரிவித்தனர். அவர்களும் செப்டம்பர் ஐந்தாம் தேதி குற்றங்களை ஒப்புக்கொள்வர்.

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆங்கை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பிரதிநிதித்தார். அவரின் வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்